Wednesday, February 16, 2011

உளுந்தை "ஸ்டாக்' வைக்கும் விவசாயிகள்

தியாகதுருகம் : உளுந்திற்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் வீட்டிலேயே "ஸ்டாக்' வைக்க விவசாயிகள் பலர் முடிவு செய்துள்ளனர். தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி உளுந்து சாகுபடி செய்துள்ளனர். குறைந்த மழையால் செடிகள் நன்கு வளர்ந்து உளுந்து மகசூல் அமோகமாக இருந்தது. கடந்த சில வாரங்களாக உளுந்து அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் சீசன் நேரங் களில் தினமும் 1,000 மூட்டைகள் கமிட்டிக்கு விற்பனைக்கு வரும். இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தும் 750 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. விளைபயிர்களின் மகசூல் அதிகரித்தால் விலை வீழ்ச்சி ஏற்படுவது வழக்கம். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருப்பதால் உளுந்து விலை 5,000 ரூபாயை தாண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை கூலியும் கூடுதலாக வழங்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. கடந்த வாரம் அதிகபட்சமாக ஒரு மூட்டை உளுந்து 4,683 ரூபாய் விற்றது. எதிர் பார்த்த விலை கிடைக்காததால் விலை உயரும் போது விற்பனை செய்ய வீட்டிலேயே "ஸ்டாக்' வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் வாரத்தின் கடைசி கிழமைகளில் உளுந்து மூட்டைவிற்பனைக்காக கமிட்டிக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.

No comments:

print