Friday, February 18, 2011

கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதில் ஆட்சேபனை இல்லை:தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி

புதுடில்லி:""வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து, காங்கிரஸ் ஐவர் குழு, தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தையை நாளை துவக்கும். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதில் காங்கிரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என, தங்கபாலு தெரிவித்தார்.

தமிழக காங். ஐவர் குழு, கட்சியின் பொதுச்செயலர் குலாம்நபி ஆசாத்தை, அவரது தெற்கு அவென்யூ இல்லத்தில் நேற்றிரவு சந்தித்தது. அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், தமிழக காங். தலைவர் தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.

அப்போது குலாம் நபி ஆசாத் குறிப்பிடுகையில்,"பா.ம.க.,தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், காங். தலைவர் சோனியாவை நேற்று சந்தித்தார்' என காங். குழுவிடம் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய தங்கபாலு கூறியதாவது:காங். ஐவர் குழு இன்னும் ஓரிரு நாட்களில் தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை துவக்கும். காங். கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள சட்டசபை தொகுதிகளை ஒதுக்கித் தருமாறு கேட்கப்படும்.காங். கட்சிக்குள் கடந்த வாரம் நடந்த உட்கட்சி கலந்தாலோசனை கூட்டங்கள் முடிந்துவிட்டன. இனி மேல், துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., குழுவுடன் தான் பேச்சு வார்த்தைகளை நடத்துவோம்.இவ்வாறு தங்கபாலு கூறினார்.மேலும் குறிப்பிடுகையில், "தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதில் காங்கிரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது' என்றார்.

No comments:

print