Tuesday, February 22, 2011

திகார் சிறையில் ராஜாவை சந்தித்து பாலு ஆறுதல் : தைரியமாக இருப்பதாக தகவல்

ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவை, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். இனி மற்ற தி.மு.க ., எம்.பி.,க்களும் ராஜாவை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லியை அடுத்த திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாவை, தி.மு.க., பார்லிமென்ட் கட்சி தலைவர் டி.ஆர்.பாலு நேற்று மாலை 4.50 மணிக்கு சந்தித்தார். சிறையின் பார்வையாளர் அறையில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராஜாவின் மனைவி, ராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து டி.ஆர்.பாலுவிடம் கேட்டபோது, "ஏற்கனவே ராஜாவுக்கு அல்சர் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவர் அவதிப்படுவதாக ராஜாவின் குடும்பத்தினர் கவலைப்பட்டனர். இதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தேன். அதுமட்டுமல்லாது அவர் எங்களது கட்சியின் எம்.பி.,யும் ஆவார்.அவரை சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்கவேண்டியது என் கடமை. அதை தான் செய்தேன். சிறையில் ராஜா தைரியத்துடன் உள்ளார். வழக்குகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தேன்' என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக எம்.பி.,க்கள் பலரும் டில்லிக்கு வந்துள்ளதால், தி.மு.க.,வை சேர்ந்த பிற எம்.பி.,க்களும் அடுத்தடுத்து ராஜாவை சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறை அதிகாரி தகவல்: இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்காக, சிறையின் விதிமுறைகள் எதுவும் தளர்த்தப்படவில்லை என சிறை அதிகாரி தெரிவித்தார்.

டில்லி, திகார் சிறை சிறையின் உயரதிகாரி நீரஜ் குமார் நேற்று கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ராஜாவுக்காக, சிறை விதிமுறைகள் எதுவும் தளர்த்தப்படவில்லை. சிறையில் அவருக்கென தனியாக எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. மற்ற கைதிகளை போல் தான், அவரும் நடத்தப்படுகிறார். திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ள தமிழக போலீசார், அவருக்கு எந்த சலுகையும் காட்டவில்லை. ஒரு அறையில் இருக்கும் கைதிகள், மற்ற அறையில் இருக்கும் கைதிகளுடன் பேச முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு அறையின் சுவர்களும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன.மற்ற கைதிகளை போல் ராஜாவும் தரையில் தான் உறங்குகிறார். தரையில் விரிப்பதற்காக அவருக்கு ஏழு கம்பளிகள் வழங்கப்பட்டுள்ளன. கோர்ட் உத்தரவை பின்பற்றுகிறோம்.எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்தால் மட்டுமே, ராஜாவை சந்திப்பதற்கு பிறருக்கு அனுமதி அளிக்கப்படும். அதேபோல் சலுகைகள் அளிக்கும் விஷயத்தில் எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்தால் மட்டுமே நிறைவேற்றுவோம்.இவ்வாறு நீரஜ் குமார் கூறினார்.

No comments:

print