Saturday, February 19, 2011

தேர்தலின் போது அறிவித்த இலவசங்கள் கிடைத்ததா? வீடு, வீடாக சென்று விசாரணை

திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதை முன்னிட்டு, தி.மு.க., அறிவித்த இலவசங்கள், மக்களை சென்றடைந்ததா என, தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க., இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற அந்த வாக்குறுதிகளே முக்கிய காரணமாக இருந்தது. வாக்குறுதிகளால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த தி.மு.க., இலவச கலர், "டிவி', இலவச காஸ் அடுப்பு ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், நிலம் இல்லாததாக காரணம் கூறி ஏழைகளுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மட்டும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. விரைவில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தி.மு.க.,வால் அறிவிக்கப்பட்ட இலவசங்களும், புதிய திட்டங்களுக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து விட்டதா என்பதை சரிபார்க்க தி.மு.க.,வினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், தி.மு.க., வட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள் உள்ளிட்டோர் மூலம் இலவசங்கள் வந்தடைந்ததா என்று கேட்டறியப்பட்டு வருகிறது.

தி.மு.க., அரசால் அறிவிக்கப்பட்ட இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம், விவசாய அட்டை, கலைஞர் காப்பீடு திட்ட அட்டை, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், விவசாய கடன், நலவாரிய அட்டைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களை சென்றடைந்ததா என, தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று கேட்டறிந்து வருகின்றனர். அப்படி யாருக்காவது வரவில்லை என்று தெரிவித்தால், அவர்களின் வீட்டு முகவரி, மொபைல்ஃபோன் எண் ஆகியவற்றை தி.மு.க.,வினர் சேகரித்துக் கொள்கின்றனர். இலவசங்கள் கிடைக்கவில்லை என்று சொல்பவர்களிடம், மொபைல்ஃபோன் எண்களை வாங்கிக் கொள்ளும், தி.மு.க.,வினர், விரைவில் இலவச திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு செல்கின்றனர். ஆகையால், இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு ஆகியவை இனிமேல் மக்களின் வீடுதேடி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தல் தேதி இன்னும், 15 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்பதால், அதற்குள் இலவசங்களை மக்களுக்கு வழங்க, அரசு அதிகாரிகளை, தி.மு.க.,வினர் முடுக்கிவிட்டு வருகின்றனர்.

இலவசம் கொடுப்பதில் வி.ஏ.ஓ.,க்களால் சிக்கல்: "சட்டசபைத் தேர்தல் வருவதையொட்டி கடந்த தேர்தலில் போது அறிவித்த இலவசங்களை மக்களிடம் அளித்திட வேண்டும்' என, தி.மு.க.,வினர் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் கணக்கு பார்த்து கொடுக்க வேண்டிய வி.ஏ.ஓ.க்கள் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தி.மு.க.,வினர் நினைக்கும் படி இலவசங்கள் பொதுமக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

print