Wednesday, February 16, 2011

வடகிழக்கு மாநிலங்களில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்:பா.ஜ., திடுக்கிடும் புகார்

கவுகாத்தி:வடகிழக்கு மாநிலங்களில் நல திட்டங்களுக்காக, ஒதுக்கப்பட்ட நிதியில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது, என, பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரிக்க, கிரித் சோமய்யா உள்ளிட்ட மூன்று பேர் குழுவை பாரதிய ஜனதா தலைவர் நியமித்தார். இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை அளித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள ஊழல் குறித்து, பா.ஜ.,பொது செயலர் சோமய்யா கூறியதாவது:வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ஏராளமான பணம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தின் பலன்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை. ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக கூறி அதற்கான பணம் மாநில அமைச்சர்களாலும் அவர்கள் குடும்பத்தாலும் சுரண்டப்பட்டுள்ளது. நீர் மின் திட்டம் மற்றும் 50 நல திட்டங்கள் மூலம் 4 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.
மத்திய பொதுகணக்கு தலைமை அதிகாரி, விஜிலன்ஸ் கமிஷன் ஆகியவற்றின் அறிக்கையை ஒப்பீடு செய்து, இந்த ஊழல்களை கண்டுபிடித்துள்ளோம்.வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசி, ஏழைகளுக்கு செல்லாமல் அசாமிலிருந்து நேரடியாக வங்கதேசத்துக்கு செல்கிறது. இதன் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகை கான்ட்ராக்டர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இந்த கான்ட்ராக்டர்களும் அமைச்சர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக தான் உள்ளனர்.அருணாச்சல பிரதேசத்தில் தான் அதிக பட்ச ஊழல் நடந்துள்ளது. ஏராளமான நீர் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தம் போடப்பட்டு அவற்றின் மூலம் கணிசமான பணம் சுருட்டப்பட்டுள்ளது.இவ்வாறு சோமய்யா கூறினார்.

No comments:

print