Tuesday, February 22, 2011

அன்புமணி உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு: மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் வழக்கில் திருப்பம்

சென்னை : மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் பாதுகாப்பு உதவியாளராக இருந்தவர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இந்த ரெய்டு சம்பவம், பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகள் துவக்குவதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், உரிய வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதில், பெருமளவில் பணம் கைமாறியதாகவும் சி.பி.ஐ.,க்கு தகவல் வந்தது.இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீடு, மருத்துவக் கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதில், முறைகேடாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதுடன், கேதன் தேசாயும் கைது செய்யப்பட்டார்.

சி.பி.ஐ., அதிகாரிகள், கேதன் தேசாயிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான தகவல்கள் சிக்கின. இதில், மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாசின் பாதுகாப்பு உதவியாளராக இருந்த, டி.எஸ்.மூர்த்திக்கு தொடர்பிருப்பதாக தெரிந்தது. மத்திய புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்து ஓய்வு பெற்ற மூர்த்தி, அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது, அமைச்சருக்கு நெருக்கமானவராக காட்டிக் கொண்ட மூர்த்தி, இண்டக்ஸ் கல்லூரிக்கு அனுமதி பெற்றுத் தந்ததில், இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சி.பி.ஐ.,யில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இது தொடர்பாக, கடந்த மாதம் டில்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரிகள், சென்னை, சேத்துப்பட்டு, குருசாமி சாலையில் உள்ள மூர்த்தியின் வீட்டிற்கு சோதனையிட வந்தனர். அப்போது, அமெரிக்காவில் உள்ள தன் மகள் வீட்டிற்கு மூர்த்தி சென்று விட்டார். இதையடுத்து, வீட்டைப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், மூர்த்தியின் வருகைக்காக காத்திருந்தனர். அமெரிக்காவில் இருந்து நேற்று காலை, மூர்த்தி சென்னை வருவதாக சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை, சென்னை வந்து வீட்டிற்குள் நுழைவதற்காக மூர்த்தி காத்திருந்தபோது, டில்லியில் இருந்து தயாராக வந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள், மூர்த்தி முன்னிலையில் வீட்டில் சோதனையிட்டனர். டில்லி அதிகாரிகள் நான்கு பேர் மற்றும் சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட ஆறு பேர், வீடு முழுக்க சோதனையிட்டனர். நேற்று காலை துவங்கிய இந்த சோதனை, பிற்பகல் 1:30 மணி வரை நீடித்தது.

சோதனையில், மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கிக் கொடுத்த போது, நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மூர்த்தியிடம் விசாரணை நடத்த உள்ளது. இதில், கல்லூரி அனுமதிக்காக பெற்ற பணம், யாரிடம் கொடுக்கப்பட்டது, நடந்த முறைகேடுகள் குறித்தும் கேட்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சி.பி.ஐ., முடிவெடுக்கும்.மத்தியஅமைச்சராக இருந்த அன்புமணியின், முன்னாள் உதவியாளர் வீட்டில் நடந்துள்ள இந்த ரெய்டு காரணமாக, பா.ம.க.,வினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

print