Tuesday, February 15, 2011

மயிலாப்பூர் இரட்டை கொலையில் அரசியல் பின்னணியா? : 20 பேரிடம் விசாரணை; முக்கிய குற்றவாளிகளுக்கு வலை

சென்னை : மயிலாப்பூர் இரட்டை கொலை சம்பவத்தில், காதல் விவகாரத்தையும் தாண்டி, ரவுடி ராஜ்யம் மற்றும் அரசியல் பின்னணியும் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளதுடன், கொலை தொடர்பாக மேலும் 20 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை, மயிலாப்பூர், சிலேட்டர் புரத்தைச் சேர்ந்தவர் பில்லா சுரேஷ் (30). விடுதலை சிறுத்தைகள் கட்சி மயிலை பகுதி செயலர். ஏகாம்பரம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (36); மயிலை பகுதி காங்கிரஸ் பிரமுகர். நண்பர்களான இருவரும், இப்பகுதியைச் சேர்ந்த பெரிய மகேஷ் என்ற ரவுடியின் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
பில்லா சுரேஷ் மற்றும் விஜயகுமார் இருவரையும் கடந்த 10ம் தேதி இரவு 15 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் ஒன்று வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. மயிலாப்பூர் மக்களை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் தொடர்பாக, அப்பகுதி போலீசார் நேற்று முன்தினம், ஐந்து பேரை கைது செய்தனர்.

கொல்லப்பட்ட இருவரின் தலைவரான பெரிய மகேஷ், ஏற்கனவே போலீசாரால்" என்கவுன்டரில்' போட்டுத் தள்ளப்பட்ட திண்டுக்கல் பாண்டியின், கூட்டாளி. இவர், இப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்து வருகிறார். இதே பகுதியில், நிர்மல் என்பவரும் தனக்கு ஆதரவாக ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். இரு கும்பல்களைச் சேர்ந்தவர்களும், அடிக்கடி தங்களுக்குள் மோதுவது சகஜம் என்கின்றனர் இப்பகுதி மக்கள். அவ்வப்போது போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும், இப்பகுதியில் ரவுடிகள் எண்ணிக்கை குறையவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது, நிர்மல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் பில்லா சுரேசையும், விஜயகுமாரையும் தீர்த்துக் கட்டியுள்ளனர் என்பது போலீசாருக்கு ஊர்ஜிதமாகியுள்ளது. காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்துள்ளதாக ஒருபுறம் தெரிவித்தாலும், அதையும் தாண்டி வலுவான காரணம் இதில் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே இரண்டு கும்பலும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளன. இது தொடர்பாக, இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதும் போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையும் தாண்டி, சமீபத்தில் சுரேசும், விஜயகுமாரும் தாங்கள் சார்ந்த கட்சியில் பெரிய அளவில் வளர்ந்து வருவதை பொறுக்காத மாற்றுக் கட்சிப் பிரமுகர் ஒருவர் நிர்மல் கும்பலை ஏவி விட்டு, அரசியல் எதிரிகளை அழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், எதிர் தரப்பைச் சேர்ந்த நிர்மல், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், சிவக்குமார், சந்திரா, நித்தியானந்தன், ஜீவா உள்ளிட்ட தலைமறைவாக உள்ளவர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீசுக்கு தெரியுமா?
தமிழகம் முழுவதும் உள்ள திட்டமிட்டு குற்ற சம்பவங்களை நடத்தும் வாடகை கொலை கும்பல்கள், ரவுடி கும்பல்கள் போன்றவற்றை கண்காணிப்பதற்கு, மாநில உளவுப் பிரிவின் கீழ், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவும், சென்னையில் மத்திய குற்றப்பிரிவில் "கேங்ஸ்டர்' பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு பிரிவைச் சேர்ந்த போலீசாரும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள ரவுடிகளை மறந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அடிக்கடி மோதி வரும் பெரிய மகேஷ் கும்பலும், நிர்மல் கும்பலும் சமீபத்தில் பகையை மறந்து சமாதானமாக போவதாக முடிவெடுத்து போலீசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்தே, போலீசார் அவர்களை கண்காணிப்பதை விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை, எதிர் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலில் சதித்திட்டம்

சென்னையில், உள்ள ரவுடிகள் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள், திருந்தி வாழும் பழைய குற்றவாளிகள், வெளியில் உள்ள ரவுடிகள் என அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மயிலாப்பூர் இரட்டைக் கொலையில் தேடப்பட்டு வரும் நிர்மல் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும், மூன்று முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள். சமீபத்தில் தான் இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளனர். மேலும், சிறையில் இருக்கும் போதே சுரேசையும், விஜயகுமாரையும் கொல்வதற்கு, "ஸ்கெட்ச்' தயார் செய்துவிட்டு தான் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காதல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இரு தரப்பிலும் மோதல் இருப்பதால், இது போன்ற சம்பவம் நடக்கலாம் என போலீசாருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், நடக்கட்டும் பார்க்கலாம் என இருந்துவிட்டதாகவும், பல ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் இருந்தும், போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்பதும் இப்பகுதி மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.

No comments:

print