Tuesday, February 15, 2011

மந்திரி துரைமுருகன் அடிக்கடி துபாய் செல்வது ஏன்: சாமி கேள்வி

வேலூர் : அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் செல்வது ஏன், என்று சுப்ரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


ஜனதா கட்சி மாநில பொதுச்செயலர் வரதராஜன் மகள் திருமணம், நேற்று வேலூரில் நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:வரும் 25ம் தேதி, ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில், வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.தற்போது நாட்டில் ஊழல் பெரிய பிரச்னையாக உள்ளது. மற்ற எதிர்கட்சித் தலைவர்கள், ஊழலை எதிர்த்து அறிக்ககை விடுவதோடு சரி. நான் மட்டும் தான் ஊழலை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, தண்டனை வாங்கி தந்து கொண்டிருக்கின்றேன்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கை விசாரிக்க வேண்டுமா, நான் தொடர்ந்த வழக்கை விசாரணை நடத்த வேண்டுமா என்பதை, வரும் ,22ம் தேதி, டில்லியில் நடக்கும் ஊழல் எதிர்ப்பு சிறப்பு நீதி மன்றம் முடிவெடுக்கும்.

இதில் நான் தொடர்ந்த வழக்கை விசாரணை நடத்துவதாக தீர்ப்பு வழங்கினால் சி.பி.ஐ., பங்கு கொள்ளும். ஆனால், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கை நடத்துவதாக இருந்தால் அதில் நான் பங்கு வகிப்பேன். "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்வதா, வேண்டாமா என, நான் தொடர்ந்த வழக்கு மீது, மார்ச் 1ம் தேதி, உச்ச நீதி மன்றத்தில் முக்கிய முடிவு எடுப்பார்கள். ஸ்பெக்ட்ரம் அலை வரிசை உரிமத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஏலம் விட வேண்டும் என தீர்ப்பு வழங்க வேண்டும்.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், பல்வா கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சொந்தமாக குஜராத்தில் தனி விமான தளம், தனி விமானங்கள் உள்ளன. இந்த விமானம் மூலம் சோனியாவின் தங்கைகள் இருவர் துபாய்க்கு சென்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தும்படி பிரதமரிடம் கேட்டுள்ளேன்.

அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் செல்கிறார். துபாயில் என்ன வேலை, இதை துரைமுருகனே விளக்க வேண்டும். விளக்காவிட்டால் நானே கண்டுபிடித்து வெளியிடுவேன்.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், ராஜா ராஜினாமா , கைது செய்யப்பட்ட போதும், "தலித், தலித்' என, கருணாநிதி சொல்கிறார். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் தலித்துக்களுக்கு சொந்தமான நிலத்தை, தி.மு.க., அரசு ஆர்ஜிதம் செய்து, எம்.ஆர்.எஃப் தொழிற்சாலை அமைக்க கொடுத்துள்ளது.இதில், இருந்து கருணாநிதிக்கு தலித்துக்கள் மீது எந்தளவு பாசம் உள்ளது என்பது தெரியும். மக்கள் இனி ஊழலை தாங்க முடியாது என முடிவுக்கும் வந்துவிட்டனர். இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரும் தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும்.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

No comments:

print