Wednesday, February 16, 2011

தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை முடித்தகாங்கிரஸ் ஐவர் குழு நேற்று டில்லி பயணம்

சென்னை:தொகுதி பங்கீடு குறித்து, தமிழக காங்கிரசாரின் கருத்துக்களை கேட்டறிந்த காங்கிரஸ் சார்பிலான ஐவர் குழு, பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பதற்காக, நேற்று காலை டில்லி புறப்பட்டுச் சென்றது.வரும் சட்டசபை தேர்தலில், தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஜி.கே. வாசனுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


இந்த ஐவர் குழு, முதல்வர் கருணாநிதியை சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது என்று கூறப்பட்டாலும், தொகுதி பங்கீடு குறித்து முதல்வருடன் காங்கிரஸ் குழுவினர் ஆலோசனை நடத்தியதாக கருதப்படுகிறது. கடந்த 13ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தியது. இதில், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் தனித்தனியாக ஐவர் குழுவினரை சந்தித்தனர். அவர்களிடம், எதிர்பார்க்கும் தொகுதி, தி.மு.க., கூட்டணியுடனான வெற்றி வாய்ப்பு, தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் முழுமையாக சேர்ந்துள்ளதா, தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும், எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்த கருத்துக்களை ஐவர் குழு கேட்டறிந்தது.
அப்போது, குறைந்தபட்சம் 60 முதல் அதிகபட்சமாக 80 தொகுதிகள் வரை தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்றும், காங்கிரசார் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடனான இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் கூறிய கருத்துக்களை கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் குழு நேற்று காலை டில்லி புறப்பட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரம் ஏற்கனவே டில்லி சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் நேற்று காலை டில்லி புறப்பட்டுச் சென்றனர்.
சென்னையில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜி.கே.வாசன், 7 மணிக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஜெயந்தி நடராஜன், காலை 9.30 மணிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கபாலு, ஜெயகுமார் ஆகியோர் டில்லி சென்றனர்.டில்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து, தி.மு.க.,வுடனான கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தமிழக காங்கிரசார் தெரிவித்த கருத்துக்களை தெரிவிப்பர் என்று கூறப்படுகிறது. அந்த கருத்துக்களின் அடிப்படையில், காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கும் முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் குழுவினர் துவக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

print