புதுடில்லி: டில்லியில், சாலை விபத்தில் சிக்கிய நகராட்சி கவுன்சில் ஊழியரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தன் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி அவரை காப்பாற்றினார். டில்லி நகராட்சி கவுன்சிலில் ஊழியராக பணியாற்றி வந்தவர் காலே ராம். இவர், தன் இருசக்கர வாகனத்தில் பலிக்கா கேந்திராவில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த கார், காலே ராமின் இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. கார் மோதியதால், காலே ராம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காரில் வந்து கொண்டிருந்தார். அடிபட்டு, சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த காலே ராமை பார்த்ததும், காரை நிறுத்தி, உடனடியாக தன் பாதுகாப்பு வாகனம் ஒன்றில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தின் அருகே இரு நாட்களுக்கு முன் நடந்தது. ராகுலின் பரிவு கண்டு பலரும் வியந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

No comments:
Post a Comment