Thursday, February 24, 2011

அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை: தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர் ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாலை 5.30 முதல் 7 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப்பின் அமையும் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் தே.மு.தி.க.,விடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

print