கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது போல், இந்த தேர்தலிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நேற்று, பிடிவாதமாக வலியுறுத்தினர். எத்தனை தொகுதிகள் என்ற இறுதி முடிவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா எடுப்பார் என, அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினர் தெரிவித்ததால், தொகுதி பங்கீடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
அ.தி.மு.க., அணியில், புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மனித நேய மக்கள் கட்சி உட்பட நான்கு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்துள்ளது. இந்த கட்சிகளை விட கூடுதல் பலம் கொண்ட கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை, அ.தி.மு.க., முடித்து விட்டது. இரு கட்சிகளும் விரும்பிக் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையின் முடிவு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினரான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவின் மாரியப்பன், பாலவாக்கம் சோமு, செய்தி தொடர்பாளர் நன்மாறன் ஆகியோர் நேற்று, ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின், மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக அமைந்தது. எங்களுடைய ஒட்டு மொத்த குறிக்கோள், தி.மு.க., ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான். இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வியூகம் அமைத்துள்ளோம். ம.தி.மு.க., வுக்கு எத்தனை இடம் என்பது பற்றி இரு தலைவர்களும் முடிவு செய்வர். இன்னும் சில கட்சிகள் இந்த அணிக்கு வரவுள்ளன,'' என்றார்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., வுக்கு, 35 தொகுதிகளை, அ.தி.மு.க., ஒதுக்கியது. அதே பார்முலாவில் இந்த முறையும், 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் வலியுறுத்தினர்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க., அணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறவில்லை. அதனால், தொகுதிகள் அதிகமாக இருந்தன. தற்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக தே.மு.தி.க., வும், அ.தி.மு.க., அணியில், இடம்பெறவுள்ளது. அக்கட்சிக்கும் கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். எனவே, ம.தி.மு.க., கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர் இறுதி முடிவை எடுப்பார் என, தொகுதி பங்கீடு குழுவினர் பேசியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
ம.தி.மு.க., வும், 35 தொகுதிகள் முடிவிலிருந்து குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., வுக்கு கடந்த தேர்தலில், 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போல, தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க.,வுக்கு வடமாவட்டங்களில் தான் செல்வாக்கு என்றால், ம.தி.மு.க., வுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக கட்சியின் கிளைகள் உள்ளன. மேற்கு, தெற்கு மாவட்டங்களில், ம.தி.மு.க.,வுக்கு தொகுதி வாரியாக கணிசமான ஓட்டு வங்கியும் உள்ளது.
கடந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில், ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் ம.தி.மு.க., தோல்வி அடைந்தது. 2001ம் ஆண்டு தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.தேர்தலில் சூறாவளி பிரசாரத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் ஈடுபடுவர். எனவே, பா.ம.க.,விற்கு எந்த விதத்திலும் ம.தி.மு.க., குறைந்த கட்சி அல்ல. பா.ம.க., வுக்கு இணையாக, 31 தொகுதிகளை கொடுத்தால் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம் என ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, தே.மு.தி.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்த பின் ம.தி.மு.க., வின் தொகுதி எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நமது சிறப்பு நிருபர்-
No comments:
Post a Comment