Wednesday, February 16, 2011

பா.ஜ.,-சிவசேனா கூட்டணியில்மூன்றாவது கட்சிக்கு இடமில்லை

மும்பை:"பா.ஜ.,-சிவசேனா கூட்டணியில் மூன்றாவது கட்சிக்கு இடம் இல்லை' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநில பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, சமீபத்தில் தேர்தல் கூட்டணி குறித்து, ஒரு பரபரப்பான தகவலை தெரிவித்தார். "பா.ஜ.,-சிவசேனா கூட்டணியில், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது' என, அவர் கூறியிருந்தார். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரிகையான "சாம்னா'வில் எழுதியுள்ளதாவது:இந்துத்வா நோக்கத்தை முன் வைத்து அமைந்தது தான், சிவசேனா - பா.ஜ., கூட்டணி. இந்த கூட்டணி 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது தான், எங்கள் நோக்கம். இந்த கூட்டணியில் மூன்றாவதாக எந்த கட்சிக்கும் இடம் இல்லை.கோபிநாத் முண்டே மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் தேசிய அரசியலில் இருக்கிறார்.
கூட்டணியை பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு கட்சிகள் போதும் என்ற மன நிலையில் நாங்கள் இருக்கிறோம்.இந்த கூட்டணியில், வேறு கட்சிகள் சேரப் போவதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில், அவர்கள் இதைச் செய்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி தொடர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியல் லாபத்துடனோ, சுய நலத்துடனோ சிவசேனா செயல்படாது.இவ்வாறு அதில் பால் தாக்கரே எழுதியுள்ளார்.

No comments:

print