கடையநல்லூர்:முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் காணப்பட்ட கல்வி வளர்ச்சி அதிகரித்திருக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்க்குடி ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். பங்கு தந்தை ஆரோக்கியம் பிரார்த்தனை செய்தார். கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். விழாவில் கல்லூரி துணை தலைவர் வினோத், ஆலோசகர் ராமநாதன், ஜெ.பீ இஞ்சினியரிங் கல்லூரி செயலாளர் ராஜகோபால், முதல்வர் ஞானதுரை உட்பட பலர் பேசினர்.விழாவிற்கு தலைமை வகித்து கல்லூரி சேர்மன் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ""உலகத்தில் கல்வி மிகவும் அவசியமாகி வருகிறது. கடந்த 30 ஆண்டு, 40 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட நிலையை விட தற்போது கல்வியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்த வரலாற்றுக்கு சொந்தக்காரராக அமைச்சர் தங்கம் தென்னரசு விளங்குகிறார். இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்லூரியில் தமிழக அரசின் மூலம் 22 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கல்விக்காக கண்ட கனவை விரிவுபடுத்தி, அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி திட்டங்களைஅறிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்களின் நலன்கருதி நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நகர பகுதிகளை போல் கிராமப்புறங்களிலும் மாணவர்கள் தரமான கல்லூரி கல்வியினை பெறும் வகையில் இப்பகுதியில் பீட்டர் அல்போன்ஸ் கல்லூரிகளை நிறுவியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
கடந்த 4 ஆண்டுகளில் இக்கல்லூரி மாணவ, மாணவியர் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பது பெருமைக்குரியதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன், டவுன் பஞ்.,தலைவர் வள்ளிமயில், துணை தலைவர் அந்தோணி வியாகப்பன், மாரிமுத்து, கென்னடி, பிச்சையா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பரிசு வழங்கினார். நிகழ்ச்சிகளை பேராசிரியை இளவரசிதொகுத்து வழங்கினார்.தமிழ்த்துறை பேராசிரியை செல்வகோமதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment