ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்கள் காவல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜாவுக்கு நான்காவது முறையாக சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதில் தராமல் மழுப்புவதாக ராஜா குறித்து சி.பி.ஐ., கருத்து தெரிவித்தது. இத்தடவை காவலுக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., காவலில் வைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று கைது செய்யப்பட்ட ராஜாவை, டில்லியில் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் வைத்து தொடர்ச்சியாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று முறை காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டில் ராஜாவை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று நான்காவது முறையாக கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர்.பாட்டியாலா கோர்ட்டுக்கு மதியம் 2 மணியளவில் ராஜாவையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் மும்பையைச் சேர்ந்த பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு, நீதிபதி சைனி முன் இருவரையும் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்கள் இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்கும்படி சி.பி.ஐ., வக்கீல் கோரிக்கை வைத்தார். அப்போது, ராஜாவின் வக்கீலான ரமேஷ் குப்தா எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
அவர் கூறியதாவது:போலீஸ் காவல் என்பது விசாரணைக்கு தேவையான ஒன்று தான். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ராஜா விஷயத்தில் எதற்காக அடுத்தடுத்து காவல் நீட்டிப்பு வேண்டும் என்பது புரியவில்லை. ராஜாவை தொடர்ந்து காவலில் வைத்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு செய்திகளை கசிய விடுவதற்கே சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் சி.பி.ஐ., செயல்படுகிறது. பத்திரிகைகளுக்கு செய்தி கசிய விடுவதன் மூலம், ராஜாவை மேலும் மேலும் களங்கப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கோர்ட்டுக்கு தரப்படாத விஷயங்களை எல்லாம் பத்திரிகைகளுக்கு சி.பி.ஐ., தந்து கொண்டே இருக்கிறது. வழக்கிற்கு அவசியம் இல்லாத விஷயங்களை தொடர்ந்து பரப்பியும் வருகிறது.எனவே, இவ்விஷயத்தில் கோர்ட் தலையிட்டு, அவசியமற்ற விஷயங்களை சி.பி.ஐ., பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே 11 நாட்கள் ராஜாவை சி.பி.ஐ., விசாரித்துவிட்டது. விசாரணையில் எந்த புதிய தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எதற்காக மீண்டும் மீண்டும் காவல் நீட்டிப்பு கேட்க வேண்டும். எனவே, காவல் நீட்டிப்பு வழங்கக் கூடாது.இவ்வாறு ரமேஷ் குப்தா கூறினார்.
தொழிலதிபர் பல்வாவின் வக்கீலான விஜய் அகர்வாலும் வாதிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:இவ்வழக்கில் முதலில் 240 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு 200 கோடி ரூபாய் பரிவர்த்தனை என்று இப்போது கூறுகின்றனர். பணம் எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு அளித்தது என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எந்த வழியில் பணம் சென்றுள்ளது என்பதையும் விளக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு வழக்குகள் என எல்லாமே சமர்ப்பிக்கப்பட்டும் விட்டது. அனைத்துமே செக் வாயிலாகவே அளிக்கப்பட்டும் உள்ளது. இதில் மறைத்ததற்கோ, முறைகேடு செய்ததற்கோ வழியும் இல்லை. எனவே, காவல் நீட்டிப்பு முறையற்றது.இவ்வாறு அகர்வால் கூறினார்.
மழுப்பல்: பின்னர் சி.பி.ஐ., வக்கீலான அகிலேஷ் வாதிட்டதாவது:ராஜாவையும், பல்வாவையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்து விட்டோம். இருவருமே உண்மைகளை கூற மறுக்கின்றனர். கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பியும், சம்பந்தமில்லாத வகையிலும் பதில் அளிக்கின்றனர். நேரடியாக எதையும் கூற மறுக்கின்றனர். இதனால், உண்மைகள் இன்னும் வெளிக்கொண்டு வர இயலவில்லை.பணம் பரிவர்த்தனை எப்படி நடந்துள்ளது என்பது குறித்து புதிய விவரங்கள் வருகின்றன. அது குறித்து இருவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சினியுக் நிறுவனத்திடம் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் மாற்றப்பட்ட விஷயத்தில் நிறைய தகவல்கள் உள்ளன. ஆதாயத்தின் பேரில் தான் ராஜா இந்த பண மாற்றத்தை செய்துள்ளார்.தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களும், கேஸ் டயரிகளும் காணாமல் போய் உள்ளன. நிறைய விவரங்களை இன்னும் கைப்பற்றியாக வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா 12 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர். பல்வாவும் பெரிய கோடீஸ்வரர். இவர்களை வெளியில் விட்டால் இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளையும் தடயங்களையும் அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காவல் நீட்டிப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அகிலேஷ் வாதிட்டார்.
இறுதியாக நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்களுக்கும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்களுக்கும் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இனி சிறை: முதல் முறை 5 நாட்களும், இரண்டாவது முறை 4 நாட்களும், மூன்றாவது முறை 2 நாட்களும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது நான்காவது முறையாக 3 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு விசாரணை கைதியை அதிகபட்சம் 14 நாட்கள் வரை காவலில் வைத்து விசாரித்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதித்த உச்சபட்ச அளவை சி.பி.ஐ., முழுவதுமாக பயன்படுத்தியுள்ளது.இனி வரும் வியாழக்கிழமை அன்று ராஜா, பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். ராஜாவின் வக்கீல் ஜாமீன் கேட்க வாய்ப்பும் உள்ளது. ஆனால், கிரிமினல் வழக்கில் ஜாமீன் என்பது உடனடியாக கிடைக்காது என்று கூறப்படுவதால், குறைந்த பட்சம் சிறையில் இருந்த பிறகு தான் ஜாமீன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நிலையில், கோர்ட்டில் இருந்து நேராக திகார் ஜெயிலுக்குத் தான் ராஜா செல்வார் என்றும் கூறப்படுகிறது.
-நமது டில்லி நிருபர்-
No comments:
Post a Comment