Thursday, February 17, 2011

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் ? ஜெயிலில் கம்பி எண்ண ராஜா‌வை அனுப்பியது கோர்ட்

புதுடில்லி: இது வரை சி.பி.ஐ.,காவலில் இருந்து வந்த மாஜி அமைச்சர் ராஜா இன்று ரிமாண்ட் செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். 2 ஜி., ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கடந்த 2 ம் தேதி மாஜி அமைச்சர் ராஜா, அவரது தனிச்செயலர் சந்தோலியா, தொலைதொடர்பு முன்னாள் செயலர் பெகுரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120பி-ன் கீழ் தவறு செய்துள்ளது, மோசடி, மற்றும் நம்பிக்கை துரோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தணிக்கை துறை கூறியிருந்தாலும், இது வரை எந்த தொகை இழப்பு, எவ்வளவு கோடி கைமாறியது என்ற விவரத்தை சி.பி.ஐ., முதல் யாராலும் உறுதியாக சொல்லமுடியாத அளவிற்கு டெக்னிக்கல் பிளான் கையாளப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ., கோர்ட்டில் தெரிவித்தது நினைவிருக்கலாம். இதற்கிடையில் ராஜா 4 முறை சி.பி.ஐ., காவலில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். இத்துடன் 15 நாட்கள் சி.பி.ஐ,. கஸ்டடியில் வைத்து விசாரணை முடிந்து விட்டது. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் மழுப்பி வருகின்றனர். எனவே இத்தனை நாள் அவகாசம் தேவைப்பட்டது என சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றுடன் காவல் நிறைவு பெற்ற நிலையில் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜா.இவரை வரும் மார்ச் மாதம் 3 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி அவரது உதவியாளர்கள் இருக்கும் திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிகிறது. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டபோது நான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன் என்றார் ராஜா.



ராஜாவுக்கு வயிற்றுக்கோளாறு: இதற்கிடையில் ராஜா தனக்கு வயிற்றுக்கோளாறு இருக்கின்ற காரணத்தினால் என்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என அவரது வக்கீல் தரப்பில் கோர்ட்டில் கோரப்பட்டது. ஆனால் இதனை மறுத்த நீதிபதி ஓ.பி., சைனி இவருக்கு தேவையான மருத்துவ வசதியை ‌ஜெயிலில் செய்து கொடுக்கும்படி கூறினார். வீட்டு பதார்த்தங்கள் கொடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டபோது இதற்கு ஜெயிலில் அதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படும் என்றார் நீதிபதி.

No comments:

print