சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், சிறிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க., புதிய, "பார்முலா'வை பின்பற்றுவதால், அதிக தொகுதிகளை எதிர்பார்த்திருக்கும் சிறிய கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், கடந்த முறை அமைந்த தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., 132 தொகுதிகளிலும், காங்கிரஸ், 48, பா.ம.க., 31 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அப்போது, இந்த கூட்டணியில் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், 23 தொகுதிகளைப் பெற்றன. இந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள், அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 23 தொகுதிகள், தி.மு.க., வசம் கூடுதல் தொகுதிகளாக உள்ளன.இந்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் பின்பற்றிய, "பார்முலா'படியே வரவுள்ள சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க.,விற்கு, 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட, 23 தொகுதிகள், தி.மு.க.,வசம் உள்ளன. இந்த தொகுதிகளைக் கொண்டு தான் விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்படும். கூடுதல் இடங்கள் கேட்கும் காங்கிரசுக்கும், இதிலிருந்தே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று, தி.மு.க., புதிய, "பார்முலா' வகுத்துள்ளது.இந்த, "பார்முலா'வுக்குள், தாங்கள் கேட்கும் தொகுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென, தி.மு.க., அறிவுறுத்தியுள்ளதால், சிறிய கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடந்த முறை, ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை இரண்டு இலக்க எண்ணிக்கையை தொடர விரும்பும் அக்கட்சி, 12 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது.மேற்கு மண்டலத்தில் கணிசமாக ஓட்டு வங்கி வைத்திருக்கும், கொங்குநாடு மக்கள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் நான்கு தொகுதிகள் வரை கேட்கிறது. தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தங்களுக்கான சின்னத்தில் போட்டியிடவும் இக்கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
தி.மு.க., "பார்முலா' படி, கம்யூனிஸ்டுகளுக்கு ஒதுக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள தொகுதிகளை, சிறிய கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தது போக, காங்கிரசுக்கு கூடுதலாக, 10 தொகுதிகள் வரை ஒதுக்க திட்டமிடப்படுள்ளது. காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட, 48 தொகுதிகளுடன், கூடுதலாக, 10 தொகுதிகள் வரையே, அதற்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment