Monday, February 28, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: விஜயகாந்த் புது யோசனை

சென்னை : "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை குறுக்கீடு இல்லாமல், முறையாக நடக்க வேண்டுமெனில், முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலக வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால், மத்திய அரசு தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சி.பி.ஐ., நடத்தும் குற்றப் புலனாய்வை சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணிக்கிறது. கடந்த 10ம் தேதி, குற்றப் புலனாய்வு குறித்து, சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்த போது, "இந்த ஊழல் பணத்தில் பலன் அடைந்தவர்களை தேடிப் பிடிக்க வேண்டும். எவ்வளவு பெரிய முக்கியஸ்தர்களாக இருந்தாலும், அவர்களை விட்டு விடக்கூடாது' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கலைஞர், "டிவி'க்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர், "டிவி' அந்த பணத்தை கடனாகக் கருதி திருப்பி தந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய எஸ்டெல் நிறுவனத்தின் பணமும், "கலைஞர் டிவி'க்கு வந்துள்ளதாக தெரிகிறது. முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஊழல் பணத்தின் மூலம் பலன் அடைந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை குறுக்கீடு இல்லாமல், முறையாக நடக்க வேண்டுமெனில் முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலக வேண்டும்.

அவர் பதவி விலக மறுத்தால், மத்திய அரசு தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர். தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம், தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் தி.மு.க., கடை பிடித்த போக்கை அறிந்துள்ள மக்களும் இதை வரவேற்பர். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

print