Wednesday, February 16, 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் சுணக்கம்: ஆசிரியர்கள் புலம்பல்

பள்ளிப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், வீடு வீடாக செல்லும் போது, குடும்ப உறுப்பினர்கள் சிலர் இல்லாததால், தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.இந்த பணியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு அதற்கான பயிற்சியும் கடந்த மாதம் அளிக்கப்பட்டது. இம்மாதம் 9ம் தேதி முதல் துவங்கி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.இப்பணி, இம்மாதம் 28ம் தேதிக்குள் இந்த பணி முடிவடைய வேண்டும். இந்நிலையில், வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும் போது குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் இருப்பது இல்லை.குடும்ப தலைவர்கள் இல்லாத நேரத்தில் விவரங்கள் குறித்து ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் முழு தகவல்கள் கொடுப்பது இல்லை. இதனால், பணி முழுமையடையாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு போன்ற கிராமங்களில் கூலி வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக இருப்பதாலும், பல்வேறு வேலை நிமித்தமாக வெளியில் செல்வதாலும், ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் முழு தகவல் பெற ஒரே வீட்டிற்கு பலமுறை அலைய வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.ஒவ்வொரு ஆசிரியரும் 120 முதல் 150 குடும்பங்கள் வரை மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும். பள்ளியில் பணிபுரிந்து கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் பலமுறை அலைந்து திரிந்து, இம்மாதம் 28ம் தேதிக்குள் கணக்கெடுக்கும் பணியை நிறைவு செய்ய முடியுமா என்று புலம்புகின்றனர்.

No comments:

print