பண்ருட்டி : "ஆன் லைன் வர்த்தகத்தால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்க துவக்க விழா பண்ருட்டி பஸ் நிலையம் முன் நேற்று துவங்கியது. மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் வீரப்பன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலர் மோகன் சிறப்புரையாற்றினார். கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த மாநிலத் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
சில்லரை வணிகத்தில் அன்னியர் ஆதிக்கத்தால் தமிழகத்தில் 20 லட்சம் வியாபாரிகள், அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் ஒரு கோடி மக்கள் பாதிப்படைகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு மாதங்களுக்கு முன் பிரதமருக்கு 2 கோடி தந்தி அனுப்பினோம். கையெழுத்து இயக்கம் வரும் மே மாதம் 5ம் தேதிக்குள் முடிக்கப்படும். பின் பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். வியாபாரிகளால் விலை அதிகரிக்கிறது என கூறுவது தவறு. ஆன்- லைன் வர்த்தகத்தில் சேர்க்கப்படும் தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது.
இவ்வாறு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
No comments:
Post a Comment