Thursday, February 24, 2011

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து

சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். ""அ.தி.மு.க., தனித்து ஆட்சியைப் பிடிக்கும்,'' என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து, வைகோ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

வெளியே வந்த வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு நாளை(இன்று) 63வது பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்; தொகுதி பங்கீடு பற்றி பேசவில்லை. தொகுதி பங்கீடு எத்தனை நாளில் இறுதி செய்யப்படும் என்பதை சொல்ல முடியாது. இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது திருப்திகரமாக இருந்தது. தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தி.மு.க., தரப்பில் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முதல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அதில் 26 அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர், பணம் பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தி.மு.க., உத்தரவுக்கு எடுபிடி வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜாவை ஜாமீனில் விடாமல் திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். சி.பி.ஐ.,யை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் அரசை, கருணாநிதி ஏன் எதிர்க்கவில்லை. ராஜா குற்றவாளி அல்ல என்று பொதுக் குழுவில் பேசும் கருணாநிதி, காங்கிரசை எதிர்த்து ஏன் போராடவில்லை.

உண்மையான பயனாளிகளைப் பற்றி ராஜா சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைச்சர்களும், எம்.பி.,க்களும் திகார் ஜெயிலுக்குச் சென்று ராஜாவை சந்திக்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழல், ஒருவர் மட்டும் செய்திருக்க முடியாது. அப்படியானால் பெரும் பங்கு யாருக்கு போயுள்ளது? காங்கிரசுக்கு பங்கு செல்லவில்லை என்றால், தி.மு.க., கூட்டணிக்காக காங்கிரஸ் ஏன் துடிக்கிறது? காங்கிரசுக்கு பெரும் பங்கு கிடைத்திருக்க வேண்டும்.

தி.மு.க.,வின் குடும்ப ஆட்சியின் கொள்ளை தொடர வேண்டுமா? தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டுமா? என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றியை தமிழக மக்கள் தருவர். இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

print