தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய்கள் உயர்த்தவும் அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தமிழநாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தாங்கள் கேட்ட அளவுக்கு அரசு கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டாலும் அரசு அளிக்க முன்வந்துள்ள விலை உயர்வு திருப்தி அளிக்கிறது எனவும் அவர் கூறுகிறார். எனினும் அரசு தற்போது உயர்த்தியுள்ள கொள்முதல் விலையின் மூலம் பால் உற்பத்தி பெருமளவுக்கு உயராது எனவும் செங்கோட்டுவேல் தெரிவிக்கிறார்.
இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
அரசின் இந்த விலை உயர்வு ஒரு இடைக்கால நிவாரணம் மட்டுமே என்று சுட்டிக்காட்டும் அவர் விலையுயர்வு கோரி மீண்டும் ஒரு போராட்டம் தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கிறார்.
பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி கடந்த எட்டு நாட்களாக தமிழ்க பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாட்டுத் தீவனங்களின் விலை உயர்வு, நிர்வாகச் செலவினங்கள் போன்ற பல காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் போராடி வந்தனர்.
No comments:
Post a Comment