Wednesday, February 16, 2011

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருத்தணியில், ஆளுங்கட்சியினர் ஒரு பூத்துக்கு முதல்கட்டமாக, 3,000 ரூபாய் வீதம் பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இதனால், திருத்தணி தொகுதியில் தி.மு.க., தொண்டர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.


தமிழக சட்டசபைத் தேர்தல், வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.,- அ.தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - ம.தி.மு.க.,- பா.ம.க., என, பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி சட்டசபைத் தொகுதியில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் பூத் கமிட்டி அமைத்து, தேர்தல் பணியை துவக்கி விட்டனர். நேற்று முன்தினம் தி.மு.க., மாவட்ட செயலர் சிவாஜி திருத்தணி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 257 பூத்துகளுக்கும் தலா 3,000 ரூபாய் வீதம் முதல்கட்டமாக பணம் பட்டுவாடா செய்தார்.

இதனால், தொண்டர்கள் மத்தியில் சுறுசுறுப்பு காணப்படுகிறது.பள்ளிப்பட்டு சட்டசபைத் தொகுதி பிரிக்கப்பட்டு, திருத்தணி தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளிப்பட்டு தொகுதியில் இருந்த திருத்தணி நகரம் மற்றும் ஏழு ஊராட்சிகள் தற்போது, திருத்தணி தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன், பள்ளிப்பட்டு தொகுதியில் தி.மு.க., போட்டியிட்டதில்லை.வழக்கமாக கூட்டணிக் கட்சிகளுக்கே பள்ளிப்பட்டு தொகுதியை தி.மு.க., ஒதுக்கி வந்துள்ளது. ஆனால், தி.மு.க., கோட்டையாக கருதப்படும் திருத்தணி நகரம் திருத்தணி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது இத்தொகுதியில் தி.மு.க., கட்டாயம் போட்டியிடும் என கருதப்படுகிறது.

இதற்கிடையே, தற்போது பள்ளிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.,வான காங்., கட்சியின் ராமனும், திருத்தணி தொகுதியில் போட்டியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பதே இன்னும் உறுதியாகாத சூழலில், தி.மு.க.,வினர் பூத் செலவுகளுக்கு பணம் பட்டுவாடா செய்யத் துவங்கியுள்ளதால், திருத்தணி தொகுதி தங்களுக்கே என, தி.மு.க., தொண்டர்கள் ஆர்வமுடன் கூறி வருகின்றனர்.

-நமது சிறப்பு நிருபர் -

No comments:

print