ராமநாதபுரம் : சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை செலவழித்துள்ள ரூ.600 கோடிக்கான பலனை பெறமுடியாத நிலையில், பல்வேறு வழிகளில் திட்டத்திற்கான நிதி செலவு செய்யப்பட்டு வருகிறது.
இந்திய கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த தி.மு.க.,வின் மாஜி மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பதவியிலிருந்த போது ரூ.2400 கோடி மதிப்பீட்டில் சேதுசமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. 2005 துவக்கவிழா நடந்தது. முதற்கட்டமாக கப்பல் செல்ல வசதியாக நாகை மாவட்டம் கோடியக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்பகுதியில் மணல் அள்ளும் பணி மேற்கொண்டனர். தனுஷ்கோடி பணியின் போது, ராமர் பாலம் சர்ச்சை எழுந்து, தற்போது திட்டம் முடங்கியுள்ளது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வரும்நிலையில், மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறை கண்டறிய கோர்ட்டு வலியுறுத்தியது.
இதற்கான பணிகள் நடந்துவருவதாக கூறினாலும், அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதுவரை நடந்த பணிகளுக்காக ரூ.600 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இருந்தும் அதனால் பயன் இல்லை. மணல் அள்ளிய பகுதிகள் நீரோட்டத்தால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவருகின்றன. ஒரு வேளை திட்டத்தை செயல்படுத்தும் நிலை வந்தாலும், பழைய நிலைக்கு கொண்டு வர மீண்டும் ரூ.600 கோடிக்கு மேல் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் என்.ஜி.ஓ.,களைகடலோர பகுதியில் ஏற்படுத்தினர். அவர்கள் மூலம் சிறப்பு நிதி ஒதுக்கி, மாற்றுத்தொழில்உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்தனர்.
அதற்காக என்.ஜி.ஓ.,களுக்கு பெரிய அளவில் நிதி பகிர்ந்தளிக்க படுகிறது. இதனால் மீனவர்கள் எந்த அளவுக்கு பயன்பெறுகிறார்கள் என்பது, மத்திய அரசுக்கே வெளிச்சம். ரூ.600 கோடி தவிர்த்து, ஒவ்வொரு பாகமாகவும் சேதுசமுத்திரத் திட்ட நிதி வீணாகி வருகிறது. ஆனால் திட்டமோ வழக்கில் முடங்கி உள்ளது.
No comments:
Post a Comment