புதுடில்லி: டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படும் விவகாரத்துக்கு பா.ஜ., சார்பில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து, இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. "உரிய விதிமுறைகளின்படி தான் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன'என, அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
கடுமையான குற்றச் செயல்கள், நாட்டின் பாதுகாப்பு அச்சம் ஏற்படுத்தும் நிழல் உலக நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டு கேட்கலாம் என, விதிமுறை உள்ளது. இந்நிலையில், டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 1.51 லட்சம் டெலிபோன்களை ஒட்டு கேட்கும்படி அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டனர்'என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பார்த்தால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 30 ஆயிரம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. நாள் கணக்கில் கணக்கிட்டால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும் தினமும் 82 டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.இந்த விவகாரம், தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:ஒரு லட்சம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கபடுவதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். நமது நாட்டு சட்ட விதிமுறைகளை பொறுத்தவரை, மிக கடுமையான குற்றம், நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரம் ஆகியவை தொடர்பான டெலிபோன்கள் மட்டுமே ஒட்டு கேட்கப்பட வேண்டும். ஒரு லட்சம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுவது என்பது, அளவுக்கு அதிகமானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக எத்தனை டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்ற விவரத்தை அரசு விளக்க வேண்டும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
அரசு விளக்கம் : டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:டெலிபோன் பேச்சுக்களை ஒட்டு கேட்பது மற்றும் இ-மெயில்களை இடைமறித்து பார்ப்பது போன்ற விவகாரங்கள், இதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி தான், கையாளப்படுகின்றன. விதிமுறைகள், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, தொலைத் தொடர்பு துறை சட்டம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தான், டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தொடர்பாக, மத்திய உள்துறை செயலர் மற்றும் மாநில உள்துறை செயலர்கள் மட்டும் உத்தரவிட்டு விட முடியாது. மத்திய அமைச்சரவை செயலர், சட்டத் துறை செயலர், தொலை த்தொடர்பு துறை செயலர் ஆகியோர் தலைமையிலான கமிட்டியும், இது தொடர்பான விஷயங்களை கண்காணிக்கும்.டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தொடர்பாக, உள்துறை செயலர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவையும் இந்த கமிட்டி ஆய்வு செய்யும். உரிய விதிமுறைப்படி தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த கமிட்டி ஆய்வு செய்யும். இதன் பின்னரே, டெலிபோன்கள் ஒட்டு கேட்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு பிள்ளை கூறினார்.
No comments:
Post a Comment