புதுடில்லி : பார்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க சில நாட்களே உள்ள நிலையில், காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பார்லிமென்ட் கூட்டம் முடங்காதிருக்க வழி காண தலைவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இதனால், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரும், குளிர்கால கூட்டத்தொடர் போல முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த வாரம், அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.பிரதமருடன் கலந்தாலோசனை செய்த பின், ஜே.பி.சி., அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அப்போது அவர் உறுதியளித்தார்.இந்த சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் நேற்று டில்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். பட்ஜெட் வரும் 28ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.அதிகரித்து வரும் பணவீக்கம், நடப்பாண்டில் உள்ள நிதிப் பற்றாக்குறை, இறக்குமதி வரியைக் குறைப்பது, அரசு வருவாயை உயர்த்துவது உள்ளிட்ட பிரச்னைகளே, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பூதாகரமாக வெடிக்கும் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளில் "2ஜி' விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு வைக்க அரசு சம்மதிக்கும் அறிகுறிகள் குறித்த பேச்சுகள் இருந்தன.
இந்த ஆலோசனை குறித்து காங்., தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், "ஜனநாயக அமைப்புகள் செயல்பட வேண்டும். அதற்கான நடைமுறைகளை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் சேர்ந்து உருவாக்க வேண்டும். அதே சமயம் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகளும் அஞ்சக்கூடாது' என்றார்.அதே சமயம் இத்தடவை, "ஜே.பி.சி' என்றமைவதால், இதையே ஒரு முன்னுதாரணமாக எதிர்க்கட்சிகள் கொள்ளக்கூடாது என்ற கருத்தும் இருக்கிறது.
இந்நிலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அடுத்த கட்டமாக பட்ஜெட் தொடர்பாக, காங்., முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தவிரவும் பார்லிமென்ட் முடங்காமல் இருக்க வரும் 20ம் தேதி சபாநாயகர் மீரா குமார், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே போல, முன்கூட்டியே எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப் போவதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment