Wednesday, February 16, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர்


புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், ராஜாவிற்கு அறிவுரை கூறியதாக தெரிவித்தார். தலைநகர் டில்லியில், நாட்டையே பெரும் அளவில் உலுக்கியுள்ள ஸ்‌பெக்‌ட்ரம் முறைகேடு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு, காமன்வெல்த் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது : ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், நேர்மையான முறையில் செயல்பட, ராஜாவுக்கு நான் அறிவுறுத்தினேன். போட்டியிடும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததன் காரணத்தினாலும், பல முன்னணி நிறுவனங்கள் இதில் இடம்பெற்றதால் ஏல நடைமுறையை ரத்து செய்வதாக ராஜா தெரிவித்தார். இதற்கு மத்திய நிதியமைச்சகமும், தொலைதொடர்பு துறை ஆணையம் உள்ளிட்ட முக்கிய தொலைதொடர்பு ஆணையமும், இதற்கு ஒப்புதல் அளித்ததால், நான் அதற்குமேல் இதில் தலையிடவில்லை என்று அவர் தெரிவித்தார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கோரிக்கையை நான் எப்போதும் ஆதரித்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் : விரைவில் துவங்க உள்ள பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். இதனை, எனது வேண்டுகோளாக ஏற்று ஜனநாயக கடமையை சரிவர ஆற்ற மத்திய அரசிற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணைக்கு தயார் : 2ஜி முறைகேடு தொடர்பாக, ஜேபிசி விசாரணை குழு முன் ஆஜராக நான் எப்போதும் தயங்கியதில்லை நான் ஆஜராக த‌யார். இதில் எனக்கு எவ்வித மாறறுக் கருத்துமில்லை என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் மாற்றம் : பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதுகுறித்த விபரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று அவர் கூறினார்.

இலங்கைக்கு கண்டனம் : இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர், இதுகுறித்து, இலங்கை அரசிடம் கடுமையாக வலியுறுத்த உள்ளோம். தமிழக மீனவர்கள் 106 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், இதுகுறித்து, இலங்கை அரசிடம் குறித்து முறையிட, வெளியுறவுத்துறை செயலர் இம்மாத இறுதியில் மீண்டும் இலங்கை செல்ல உள்ளார். அப்போது அவர் இதுகுறித்து கடும் கண்டனத்தை தெரிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

வலுவான நிலையில் நாட்டின் ‌பொருளாதாரம் : பத்திரிகையாளர்களுடனான கேள்விகளுக்கு முன்னர், பிரதமர் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சி விகிதம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதால் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் மன்‌மோகன் சிங் தெரிவித்துள்ளார். . இதில் அவர் கூறியதாவது, மத்திய அரசு, நாட்டில் முறைகேடுகளை ஆதரிக்கவில்லை, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகரித்து வரும் பணவீக்க உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது கவலையளிக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். விரைவில் பணவீக்க விகிதம் கட்டுக்குள் கொண்டு வரப்படும், அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. உள்நாட்டுபாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். எத்தகைய தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வண்ணம், உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. உல்பா அமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜமமு- காஷ்மீர் பிரச்னையும் சுமூகமாக ‌தீர்ப்பதற்கு வழிவகைககளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

print