Wednesday, February 16, 2011

சுனாமி வீடு கட்டித் தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

கடலூர் : சுனாமி வீடுகள் கட்ட தாமதமாவதை கண்டித்து ஏணிக்காரன் தோட்டம் மக்கள், நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடலூர் அடுத்த ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் மீனவர்களுக்கு சுனாமி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. அதேப்போன்று மற்றவர்களுக்கும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அங்கு வீடுகள் கட்டித்தர கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 169 குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் பட்டா, மனை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்த்ததில் 10 பேருக்கு சரியான ஆவணங்கள் இல்லாததால், அதனை சமர்ப்பிக்குமாறு தாலுகா அலுவலகம் மூலம் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட காலதாமதத்தை கண்டித்தும், அனைவருக்கும் வீடு வழங்கக் கோரியும் நேற்று மாலை 4.30 மணிக்கு ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் அறைமுன் இரவு 9.30 மணி வரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டுமனை வரைபடம் உடனடியாக பெற்றுத்தர ஆவன செய்வதாக தாசில்தார் உறுதியளித்தார்.

No comments:

print