புதுடில்லி:""இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இன்னும் ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவர். இதுகுறித்து இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பெரீஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன்,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுடன், தமிழக காங்., தலைவர் தங்கபாலு நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டம் கிருஷ்ணாவின் இல்லத்தில் நேற்று மதியம் நடந்தது. அதன் பின், கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் பெரீஸ் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் ஆவண செய்வதாக கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் விடுவிக்கப்படுவர். கொழும்பிலுள்ள இந்திய தூதரிடமும் இதுகுறித்து இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கிருஷ்ணா, "கச்சத்தீவை மீட்பது குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இதுகுறித்து இலங்கை அரசுடன் சர்வதேச ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதை மீறுவது முடியாத காரியம்' என்றார்.
No comments:
Post a Comment