Sunday, February 6, 2011

ரூ.1 லட்சத்தில் 240 சதுர அடியில் வீடு கட்ட முடியுமா !கலெக்டர் ஆபிசில் பரபரப்பு

தூத்துக்குடி:240 சதுர அடியில் வீடு கட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் செலவாகும்.ஆனால் ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்தால் எப்படி கட்ட முடியும் என்று நேற்று தூத்துக்குடியில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் நகர்புற பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆவேச கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் வீடு கட்ட மானியத்துடன் கடன் வழங்குவது சம்பந்தமாக மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் ஆபிசில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரனன் தலைமையில் நடந்தது.தூத்துக்குடி மாவட்ட நகர்புற பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் புதியதாக அறிவிக்கப்பட்டது. மாத வருமானம் 5 ஆயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், 5 ஆயிரத்திற்கு மேல் 10 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை செய்து கடன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இது சம்பந்தமாக மக்களை அணுகி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பம் பெற்று அவர்களுக்கு கடன் பெற்று கொடுக்க வழி செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கடன் பெறும் முறைகள் குறித்து விளக்கினர். அவர்கள் கூறியதாவது; இந்த திட்டத்தின் படி ஒரு சென்ட் நிலத்தில் 240 சதுர அடி வரை வீடு கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாயும், ஒரு சென்ட் நிலத்திற்கு மேல் 431 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் பாங்க் மூலம் கடன் வழங்கப்படும்.மாதம் ஒரு லட்ச ரூபாயிற்கு சுமார் 540யும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயிற்கு 850 ரூபாய் மாத தவணையாக கடன் தொகை செலுத்த வேண்டியது வரும். இந்த திட்டத்திற்கு வீட்டு வசதி வாரியம் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படும். பாங்க் கடனுதவிக்கு ஏற்பாடு செய்யும். பெறும் கடனுக்காக பாங்க்கில் அந்த இடத்தின் பத்திரத்தை அடமானமாக கொடுக்க வேண்டும்.இதுவரை ஆயிரத்து 750 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் தகுதியானவர்களுக்கு வரும் 9ம் தேதி கடன் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.பின்னர் மக்கள் பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பதில் அளித்தனர். இருப்பினும் ஒட்டு மொத்தமாக மக்கள் பிரதிநிதிகள் இந்த கடன் தொகை காணாது. ஒரு லட்ச ரூபாயிற்காக வீட்டு பத்திரத்தை 20 ஆண்டுகள் பாங்கில் அடமானம் வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.ஒரு சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தற்போது ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால் 240 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு 2 லட்சத்து 69 ஆயிரம் செலவாகும். ஆனால் ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.பத்திரத்தையும் பாங்கில் வாங்கி கொண்டால், மீதியுள்ள பணத்திற்கு அவரால் என்ன செய்ய முடியும். அந்த அளவிற்கு பணத்தை அவரால் எப்படி கொண்டுவர முடியும். இதனை யோசனை செய்யாமல் குறைவாக பணம் கொடுத்தால் எப்படி செய்ய முடியும். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் ஆவேசமாக பேசினர்.இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் முடிவுப்படி நாங்கள் முழு விளக்கத்தை சொல்லியுள்ளோம். மக்களை அணுகி நீங்கள் பயனாளிகள் தேர்வுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறினர்.ஆனால் மக்கள் பிரதிநிதிகள் இதற்கு போதிய சம்மதம் தெரிவிக்காததால் மீண்டும் வரும் 7ம் தேதி கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்றைய கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்காமல் கூட்டம் முடிந்து விட்டதாக வெளியே வந்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

No comments:

print