சென்னை: 2011-2012ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்தார். தமிழக சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் கடந்த கால சாதனைகளே இந்த பட்ஜெட் உரையில் பெருமளவில் இடம் பெற்றது.
பள்ளி கல்வி துறைக்கு 12,674 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் கல்வி பயிலும் பட்டதாரிகளுக்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 750 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ.8812 கோடியும், நகராட்சிக்கு 2198 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையை நவீனப்படுத்த ரூ.3,239 கோடி ஒதுக்கீடு, அதில் சிறைத்துறைக்கு மட்டும் ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 5,143 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் காப்பீடு திட்டத்தில் ரூ.72 கோடி செலவில் 2,70,000 பேர் பயன் பெற்றுள்ளனர். 5 ஆண்டுகளில் 168 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டிவி வழங்கும் திட்டத்துக்கு 375 கோடியும், ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்கு ரூ.337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டத்திற்கு ரூ. 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ. 400 கோடியும், நீதிமன்றங்களை கட்டவும், மேம்படுத்தவும் நீதித்துறைக்கு ரூ. 633 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத்திட்டம் மூலம் 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 42 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் 385 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு: இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்த்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேச முற்பட்ட போது சபா நாயகர் அனுமதி தராததால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
No comments:
Post a Comment