Saturday, February 5, 2011

நாட்டின் புகழுக்கு களங்கமான ஊழலை நீக்க நேரம் வந்தது : பிரதமர் சூளுரை

புதுடில்லி : "திறமையான நிர்வாகத்தின் வேரை அடியோடு அழிக்கும் கருவியாக ஊழல் உள்ளது. ஊழல் பிரச்னைகளால், சர்வதேச அளவில் நம் நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது. ஊழலை ஒழிக்க, துணிச்சலாகவும், விரைவாகவும் செயலாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.


டில்லியில், மாநில தலைமைச் செயலர்களின் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது: சமீபகாலமாக, ஊழல் பிரச்னைகள் நம் நாட்டில் அதிகமாக பேசப்படுகிறது. நம் நாட்டின் திறமையான நிர்வாகத்தை, வேரோடு அழிக்கும் கருவியாக ஊழல் உள்ளது. இதனால், சர்வதேச அளவில் நம் நாட்டின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதோடு, நம் நாட்டினரே, நம்மை தாழ்வாக பார்க்க கூடிய சூழலும் உருவாகியுள்ளது. ஊழலை ஒழிக்க துணிச்சலாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஏற்கனவே இரு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில் குறைபாடு உள்ளதாக, பரவலாக புகார் எழுந்துள்ளது. போட்டி, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றால், ஊழல் நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. நிர்வாக சீரமைப்பை முறையாக மேற்கொள்ளும் போது லஞ்ச ஊழல் வாய்ப்புகள் அதிக அளவில் குறையும்.

காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையும், நக்சலைட்களால் ஏற்பட்டுள்ள பிரச்னையும், உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வன்முறைகள் நிகழ்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. அர்த்தமுள்ள அமைதி பேச்சுவார்த்தைகளின் மூலமே, இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க முடியும். இந்த விவகாரத்தில், சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். வழிகாட்டல், தகவல் பரிமாற்றம், போலீஸ் துறையை நவீனப்படுத்துவது, போலீசாருக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தவது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதேபோல பாதுகாப்பு விஷயம் குறித்து சிறப்பாக மாநில அரசுகள் கையாள வேண்டும். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது. இது தொடர்பாக 13வது நிதிக் குழு, போதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. எனவே, மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு தேவையான வளங்களை, மத்திய அரசு தொடர்ந்து வழங்கும். தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் போன்றவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நிகழ்கின்றன. அதிகாரிகள் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பணவீக்கம் தடையாக உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். சில மாநிலங்களில் ஆக்ட்ராய் வரிவிதிப்பும் உள்ளது. விவசாய பொருட்கள் உற்பத்தி சந்தை கமிட்டி சட்டத்தை (ஏ.பி.எம்.சி.ஏ.,) மாநில அரசுகள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

No comments:

print