Monday, February 7, 2011

வெத்துவேட்டு... : ஜெ., மீது முதல்வர் காட்டம்

சென்னை : "தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை ஒழுங்காக படித்தால், விலைவாசி உயர்வுக்கான காரணங்களும் புரியும்; அதை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளும் தெரியும்' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட, "கேள்வி - பதில்' அறிக்கை:

இடைக்கால பட்ஜெட்டை, "வெத்து வேட்டு அறிக்கை' என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
ஒரு, "வெத்து வேட்டு' பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்.

ராகுகாலத்தை மனதில் வைத்து, சட்டசபை நிகழ்ச்சிகளில் கேள்வி நேரத்தை புகுத்தி, காலை 10.30 மணிக்கு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஜெ., சொல்லியிருக்கிறாரே?
கேள்வி நேரத்தை ஒத்தி வைப்பதாக இருந்தால், எதிர்க்கட்சிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்; வைத்துக் கொள்வதற்கு யாரிடமும் ஒப்புதல் பெறத் தேவையில்லை. 2001ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, கேள்வி நேரம் நடந்த பிறகு தான், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், ராகுகாலம் கருதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது. இப்படித் தான், அவசரக் குடுக்கையாக, யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு ஜெயலலிதா பொய்யாக அறிக்கை கொடுப்பதும், பிறகு ஆதாரத்தோடு பதில் கொடுத்த பிறகு, வாயை மூடிக்கொண்டு மவுனியாவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

தமிழக அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து 1,541 கோடி ரூபாயாக இருப்பது கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெ., கேட்டிருக்கிறாரே?
ஜெ., ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலத்தில் வாங்கிய கடனையும் சேர்த்துத் தான் இந்த கடன் தொகை. ஜெயலலிதாவுடன் இன்று உறவு பூண்டுள்ள கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநில அரசுகள் பெற்ற கடன்தொகையை விட, தமிழக அரசு பெற்ற கடன்தொகை குறைவு தான்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றிக் கூறாமல், விலை உயர்வுக்கான காரணங்களை பட்ஜெட்டில் பட்டியலிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியிருக்கிறாரே?
இடைக்கால பட்ஜெட்டை ஒழுங்காக படித்தால், விலைவாசி உயர்வுக்கான காரணங்களும் புரியும்; அதை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளும் தெரியும்.

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும்பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு தொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிடாததன் மூலம், இது குறித்து அரசுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறாரே?
கேரள கவர்னரின் உரையை ஏடுகளில் கண்டதும், உடனடியாக கண்டித்ததோடு, உரிய தருணத்தில் சுப்ரீம் கோர்ட் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி, நிதியமைச்சர் பட்ஜெட்டை படித்து முடிக்கும் கட்டத்தில், அது படிக்கப்பட்டது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதை காட்டுவதாக மார்க்சிஸ்ட் விமர்சனம் செய்துள்ளதே?
அ.தி.மு.க.,வின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தோழமைக் கட்சி உடன்பாட்டை மீறாதவர்கள் மார்க்சிஸ்டுகள்.

தொழிலாளர்கள் போராட்டங்களில் நிர்வாகத்தின் பக்கமே தமிழக அரசு நிற்கிறது என்று மார்க்சிஸ்ட் செயலர் கூறியிருக்கிறாரே?
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான தேர்தலில் தி.மு.க., தொழிற்சங்கம், அவர்களது சங்கத்தை விட அதிக ஓட்டுகளைப் பெற்றதே, எங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவை நிரூபிக்கும்.இவ்வாறு முதல்வர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

print