விழுப்புரம் : மீண்டும் ஆட்சிக்கு வருவோம், திட்டங்களும் தொடருமென, துணை முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்று உங்கள் ஆதரவில் நடக்கும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், தேர்தல் உறுதிமொழியாக சொன்னவை அனைத்தும் நடந்துள்ளது. சொல்லாத வாக்குறுதிகளும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக உலகிலேயே எங்குமில்லாத திட்டமாக, கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஆறு ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு முதலாமாண்டிலே மூன்று லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 305 வீடுகள் கட்டித் தர கணக்கிடப்பட்டு, அதில் 37 ஆயிரத்து 817 வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.இதில் 6.12.10ல் நடந்த விழாவில் 1,000 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று 2,500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளன. ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 614 பேருக்கு வரும் 2016ம் ஆண்டிற்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு இதில் சந்தேகம் உள்ளது, வரும் மே மாதம் தேர்தல் நடக்க உள்ளதால், திட்டங்களை முடித்திட முன் கூட்டியே அடையாள அட்டைகளை வழங்கியுள்ளோம். மீண்டும் 6வது முறையாக முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி தொடரத் தான் போகிறது. திட்டங்களும் தொடரும்.
இந்த ஆட்சியின் மீது, கருணாநிதியின் மீதுள்ள உங்களது நம்பிக்கை தான் இந்த மகிழ்ச்சியைக் காட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான ஆட்சிக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.இது கம்ப்யூட்டர் காலம் பெண்கள் கல்வியில் ஆர்வத்துடன் உள்ளீர்கள், இந்த நாட்டை ஆளப் பிறந்த நீங்கள் நல்ல கல்வி சூழலைப் பெற்றாக வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதைப் பயன்படுத்தி வாழ்வினை வளமாக்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment