புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு சர்ச்சை ஓய்வதற்குள் மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இஸ்ரோவிலும் ( இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் ) அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்ய இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது தான் ஆண்ட்ரிக்ஸ் என்ற நிறுவனம்.
இந்நிலையில் கடந்த 2005 ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 20 ஆண்டுகள் வரை இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள ரூ. 1000 கோடி மட்டுமே கட்டணமாக பெறப்பட்டது.
ஆனால் இதே இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது. இதற்காக ரூ. 12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ. 1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் தேவோஸ் நிறுவனத்துக்கு சொற்ப தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இஸ்ரோவுக்கு ரூ. 2லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment