"தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறும்' என, முதல்வர் கருணாநிதி, டில்லியில் நேற்று முன்தினம் அறிவித்ததும், நெய்வேலியில், "கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்தார். தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில், குறைந்தது, 35 தொகுதிகள் வேண்டும் என, பேரம் பேசுவதற்காக, ராமதாஸ், "இரட்டை வேடம்' அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.
"பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, நாங்களும் முடிவு செய்யவில்லை' என, டில்லியில், முதல்வர் கருணாநிதி நேற்று புதிய கருத்தை தெரிவித்திருப்பதால், இது வரை தி.மு.க., அணியில் இருந்த பா.ம.க., எந்த அணிக்கு தாவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., படுதோல்வியை தழுவியது. தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறிய பா.ம.க., மீண்டும் தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தது.பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பது குறித்து. தி.மு.க., உயர் நிலை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில், பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்றும், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து, 2013ம் ஆண்டில் வரும் ராஜ்யசபா தேர்தலில், பா.ம.க.,வுக்கு இடம் தருவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையில், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது' என, முதல்வர் கருணாநிதி, டில்லியில் நேற்று முன்தினம் அறிவித்தார். உடனே, நெய்வேலியில் நடந்த பா.ம.க., இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ராமதாஸ், "கூட்டணி குறித்து இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை' என, கருத்து தெரிவித்தார்.
ராமதாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டில்லியில் நேற்று, முதல்வர் கருணாநிதி, "பா.ம.க.,வை சேர்ப்பது குறித்து நாங்களும் இன்னும் முடிவு செய்யவில்லை' என, புதிய கருத்தை தெரிவித்தார். எனவே, தி.மு.க., அணியில் பா.ம.க., இடம் பெறுவதில், தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
பா.ம.க.,வுக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தன் மகன் அன்புமணிக்கு பெற முடியாத அதிருப்தி ராமதாசுக்கு இன்னமும் இருந்து வருகிறது. ராஜ்யசபா பதவிக்கு எந்த கட்சியையும் நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக, சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம், 35 முதல் 40 தொகுதிகளில் போட்டியிட்டு, ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்றும் அளவுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் கணிசமாக இடம் பெற வேண்டும் என்பது ராமதாசின் திட்டமாக உள்ளது.அதனால் தான், தி.மு.க., அணியில், கடந்த தேர்தலில், 31 தொகுதிகளை ஒதுக்கியது போல, தற்போதும், 31 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, பா.ம.க., விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், 21 முதல், 25 தொகுதிகள் பேரம் பேசப்படுவதால், அ.தி.மு.க.,விடம் பேரம் பேச ராமதாஸ் தயாராகியுள்ளார்.
கூட்டணி விவகாரத்தில் இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைத்து, பேரம் பேசி, அதிக சீட்டுகளை பெற முடியும் என ராமதாஸ் கருதுகிறார். பா.ம.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதா, வேண்டாமா என்பது குறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் தி.மு.க., பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்ய முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
பா.ம.க., கேட்கும் தொகுதி எண்ணிக்கைக்கு அ.தி.மு.க., தரப்பில் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தே.மு.தி.க., முடிவுக்கு பின் பா.ம.க.,வை பற்றி யோசிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் பா.ம.க., பொதுக்குழு கூடும் என தெரிகிறது. அக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர்
No comments:
Post a Comment