"தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி கூறியதற்கு, பா.ம.க., உடனடி பதிலடி கொடுத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க நினைத்த தி.மு.க.,வின் திட்டம், "பணால்' ஆனது.
டில்லியில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் உடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காகவும் தமிழக முதல்வர் கருணாநிதி, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, "தற்போதைய நிலையில் எங்கள் கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன' என்றார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று பகல் 12 மணிக்கு, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த கருணாநிதியிடம், "பா.ம.க, குறித்து நீங்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கு, நேர்மாறாக ராமதாஸ் பதில் கூறியுள்ளாரே' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளிக்கும்போது, "நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூட்டணியில் எப்போது இணைவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார். பா.ம.க., குறித்த முதல்வரின் நிலைப்பாடு ஒரே இரவுக்குள் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க. கூட்டணியில் இம்முறை எப்படியும் முடிந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு அதிகமாக சீட்டுகளை அளிக்க தி.மு.க., தீர்மானித்திருந்தாலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுக்க தி.மு.க, தயாராக இல்லை. காங்கிரஸ் உடனான பேரத்தின் கடுமையை முடிந்தளவுக்கு குறைக்க தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான், மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைத்த அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்க முன்வராமல் தவிர்த்து விட்டது. இந்த வழியில், பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், இட நெருக்கடியை காரணம் காட்டி காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தர இயலாது என சமாளிக்கலாம் என்று தி.மு.க., திட்டமிட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாகவே கூட்டணியில் பா.ம.க.,வும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான், காங்கிரசுடன் பேரம் பேசும் போது எளிதாக இருக்கும் என்று தி.மு.க, எதிர்பார்த்தது. இதன் மூலம் அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க தி.மு.க., நினைத்தது. இதனடிப்படையில், டில்லி வந்ததும், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க, உள்ளது' என்று கருணாநிதி பேட்டியளித்தார்.
இப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்துக் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குழப்பமும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்கு தெரியாது?பிரதமரைச் சந்தித்த பின், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தபோது, "மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.
- நமது டில்லி நிருபர்
No comments:
Post a Comment