Saturday, February 5, 2011

அ.தி.மு.க.,விடம் 39 தொகுதிகள் கேட்கிறது ம.தி.மு.க.,

சென்னை : அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம், 39 தொகுதிகளை கேட்டு, ம.தி.மு.க., விருப்பம் தெரிவித்துள்ளது.


அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினரான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் மாரியப்பன், பாலவாக்கம் சோமு, குருநாதன் ஆகியோர் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை, அக்கட்சியின் குழுவினர், அ.தி.மு.க., குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி வீதம், 39 லோக்சபா தொகுதிகளுக்கு, 39 சட்டசபை தொகுதிகளை கேட்டு அ.தி.மு.க.,வினரிடம், ம.தி.மு.க., குழுவினர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில்ம.தி.மு.க.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பேச்சுவார்த்தை முடிந்த பின் வெளியே வந்த ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. தேர்தலில், குடும்ப ஆட்சியும், ஊழல் ஆட்சியுமான தி.மு.க., ஆட்சியை அகற்றி விட்டு, 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்குரிய வியூகம் அமைப்பது குறித்தும் பேசினோம். தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கைகள் தயார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை தலைமை தான் முடிவு செய்யும். வைகோ போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் சேர இருக்கின்றன. எனவே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் நடக்கவுள்ளது. இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

No comments:

print