Sunday, February 13, 2011

தமிழகத்தில் 65 லட்சம் மொபைல் இணைப்புகள் சேவையை பாராட்டி ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்

மதுரை : ""தமிழகத்தில் 65 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 10 லட்சம் இணைப்புகள் வழங்க 500 இடங்களில் டவர்கள் அமைக்கப்படுகிறது. தமிழக பி.எஸ்.என்.எல்.,சேவையை பாராட்டி ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,'' என பி.எஸ்.என்.எல்., தமிழக வட்ட தலைமை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் கூறினார். தமிழக பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையை பாராட்டி மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சக எஸ்.டி.கியூ.சி., சார்பில் ஐ.எஸ்.ஒ., தரச்சான்றிதழ் வழங்கும் விழா நேற்று மதுரையில் நடந்தது. மத்திய எலக்ட்ரானிக்ஸ் டெஸ்ட் மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் மதியழகன் சான்றிதழ் வழங்கினார். அதை தலைமை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் பெற்று கொண்டார். மொபைல் சேவை பொது மேலாளர்கள் நாராயணன், சந்தோசம், மதுரை பொது மேலாளர் ராஜம், துணை பொது மேலாளர்கள் சத்தியசீலன், சேவியர், குமரேசன், பி.ஆர்.ஒ., பிரகலாதன் கலந்து கொண்டனர். தலைமை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் கூறியதாவது: தரமான சேவை, பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்வது போன்ற பலஅம்சங்களை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவைக்கு ஐ.எஸ்.ஒ., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 65 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் மட்டும் தமிழகத்தில் 8 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதிலும்மதுரையில் 1.1 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதற்காக மதுரை தொலை தொடர்பு வட்டத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து பகுதிகளிலும் மொபைல் போன் சேவை கிடைக்க, 1,500 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களிலும் மொபைல் சேவை கிடைக்கிறது. தற்போது 10 லட்சம் இணைப்புகள் வழங்க, 500 டவர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 760 நகரங்களில் 3 ஜி சேவை வழங்கப்படுகிறது. விரைவில் 4 ஜி சேவை வழங்க ஆயத்த பணிகள் நடக்கின்றன. நம்பர் மாற்றாமல் மொபைல் போன் நிறுவனங்களை மாற்றும் வசதியால், பி.எஸ்.என்.எல்லுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை, என்றார்.

No comments:

print