சட்டசபை தேர்தல் பணியில் முழுவீச்சில் இறங்குவதற்காகவும், கூட்டணி குறித்த குழப்பங்களை தீர்ப்பதற்காகவும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வைத்த, "டீ-பார்ட்டி' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க.,வைப் பொறுத்தவரை, தேர்தல் காலங்களில் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணியை எப்படியாவது முன்கூட்டியே உறுதி செய்துவிடும். ஆனால், இந்த தேர்தலில் அது உடனடியாக சாத்தியமாகாமல், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் சந்தித்த படுதோல்வி, பென்னாகரம் இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றை வரவுள்ள சட்டசபை தேர்தலில் சரிக்கட்டி விடலாம். அதற்கு, சாதகமாக கூட்டணியை அமைத்துக் கொள்ளலாம் என்று பா.ம.க., தெம்பாக இருந்தது. இந்நிலையில், பா.ம.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்ததாக தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து பா.ம.க., மத்தியில் இறுக்கத்தை அதிகரித்தது. இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். ஜி.கே. மணியும், வேல்முருகனும் தி.மு.க., தரப்புடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், கூட்டணி பற்றி மகிழும்படியான தகவல்கள் பா.ம.க.,வுக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேர முக்கிய கட்சிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது பா.ம.க.,வுக்கு ஆறுதல் அளிப்பதாக இல்லை. தே.மு.தி.க.,வுக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவம் தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பா.ம.க., தலைமை கருதுகிறது. இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த வியாழன் இரவு கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, "டீ பார்ட்டி' கொடுத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராமதாஸ் உறவினர் வீட்டில் நடந்த இந்த, "டீ பார்ட்டி'யில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டணி அமைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து அப்போது சிலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, தி.மு.க.,வும், காங்கிரசும் தங்களை இழுத்தடிப்பதாவும் சில எம்.எல்.ஏ.,கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதன் பின் ராமதாஸ் பேசும் போது, " கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்படாதீர்கள். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்துங்கள்' என்று எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்ட போது, "சட்ட சபை இறுதி கூட்டம் முடிந்து விட்டதால், இனி எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகளை பாராட்டுவதற்காக, "பார்ட்டி' ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், தேர்தல் குறித்தும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன. தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டார்' என்றனர். பா.ம.க., தலைவர் நடத்திய, "டீ பார்ட்டி'யில் பரிமாறப்பட்ட தகவல்கள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆளுங்கட்சியும் ஆர்வம் காட்டியுள்ளது. தி.மு.க., கூட்டணியையே, பா.ம.க., விரும்புவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து ஆளுங்கட்சி தரப்பிலும் ஆலோசனை தீவிரமாகியுள்ளது.
No comments:
Post a Comment