சேலம்: ஊரக வளர்ச்சித்துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 8ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டிச., 7,8,9 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் திட்டமிட்டிருந்தது. இதனிடையே, சம்மந்தப்பட்ட துறை இயக்குனர்கள் பேச்சு நடத்தி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததன் அடிப்படையில், போராட்டம் கைவிடப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாததால், வரும் 8,9,10 தேதிகளில் தொடர் வேலைநிறுத்தம் செய்ய, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் சவுடாம்பிகா ஹோட்டலில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் திருவரங்கன், பொருளாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஊராட்சி உதவியாளர்களுக்கு 3,500 ரூபாய் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கண்காணிப்பாளர் நிலையிலான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும், ஊராட்சி உதவியாளர்களுக்கு பணி ஓய்வின்போது 50 ஆயிரம் ரூபாய் பணிக்கொடை, கருணை அடிப்படை நியமனம், மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment