தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக, கூட்டணி பேச்சு வார்த்தைக்காக தங்கள் பலத்தை காட்டும் வகையில், அரசியல் கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களாக தி.மு.க., அ.தி.மு.க., போன்ற பிரதான கட்சிகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றன.அந்த வரிசையில் சேலத்தில் மாநாடு நடத்தி, தேர்தல் களத்தை சூடாக்க தயாராகிறது தே.மு.தி.க.,
"மக்களோடு மட்டும் கூட்டணி' என்று முழங்கி, இரு கழகங்களையும் கடுமையாக விமர்சித்து வந்த விஜயகாந்த், சமீபகாலமாக அ.தி.மு.க.,வை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த தொழிற் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு தே.மு.தி.க., பகிரங்கமாக ஆதரவு அளித்தது. இது சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., கூட்டணி அமைப்பதற்கான அடித்தளம் என்று இரு கட்சியிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், "மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில் ஜன., 9ம் தேதி சேலத்தில் சிறப்பு மாநாட்டை தே.மு.தி.க., நடத்துகிறது. மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்களை திரட்டி, தங்களது பலத்தை காட்ட பம்பரமாய் களமிறங்கியுள்ளனர் தே.மு.தி.க., நிர்வாகிகள்."கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை அழைக்கலாமா, வேண்டாமா' என்ற சந்தேகத்தோடு, மதில் மேல் பூனையாக இருக்கும் பிரதான கட்சிகளை, இந்த மாநாடு மூலம் முடிவெடுக்கச் செய்ய முடியும் என்று விஜயகாந்த் நம்புகிறார். ஏற்கனவே, ஆளுங்கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜயகாந்த் இந்த மாநாட்டிலும் அனல் கக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களால், தி.மு.க.,வினர் தான் பயனடைகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விஜயகாந்தின் பேச்சு அமையவுள்ளது. மாநாட்டிற்கு ஆளுங்கட்சி பல்வேறு இடையூறுகளை கொடுக்கும் என்று எதிர்பார்த்து தே.மு.தி.க., காத்திருக்கிறது. அப்படி இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால், அதையே பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டுமென, கட்சியின் மாவட்டச் செயலர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எத்தனை பேரை அழைத்து வர வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர்களுக்கு சட்டசபை தேர்தலில், "சீட்' கிடைக்கும் என்ற தகவல் நிர்வாகிகள் மட்டத்தில் உலவுகிறது.இதனால், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு மீறி, செலவு செய்து பெரும் கூட்டத்தை திரட்டி, தலைமையிடம் நல்ல பெயரைப் பெற முயற்சி எடுத்து வருகின்றனர். கூட்டத்திற்கு ஆள் சேர்க்காமல், "டிமிக்கி' கொடுக்கும் மாவட்டச் செயலர்களுக்கு, மாநாடு முடிந்ததும், "கல்தா' கொடுக்கப்படும் என்ற பயமும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.மொத்தத்தில், பெரும் கூட்டத்தை திரட்டி, ஆளுங்கட்சிக்கு எதிராக மாநாட்டில் விஜயகாந்த் செய்யவுள்ள பிரகடனம், தி.மு.க.,வுக்கு நெத்தியடியையும், கூட்டணியில் சேர்த்தால் அதிக சீட்களை ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.,விற்கு நெருக்கடியையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
கழகங்களின் பாணியில் அடிதடி!தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் கலாட்டா நடைபெறுவதும், கோஷ்டிப் பூசல்கள் ஏற்படுவதும் சகஜம். அந்த கழகங்கள் பாணியில் தே.மு.தி.க.,விலும் கோஷ்டி மோதல்கள் வெளிப்படையாக நடந்து வருகின்றன.சேலம் தே.மு.தி.க., மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சார்பில் தனியார் மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. ஆலோசனை நடந்து கொண்டிருந்தபோது, ஒன்றிய செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கணபதி, தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடந்த மண்டபத்திற்கு வந்தார்.மாவட்ட நிர்வாகிகளிடம் தன்னை நீக்கியதற்கு விளக்கமளிக்குமாறு கேட்டார். இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு ஏற்பட்டது. முன்னாள் ஒன்றிய செயலரின் ஆதரவாளர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை, தென்னரசு ஆதரவாளர்கள் மீது தூக்கி வீசினர்.ஒரு மாதத்திற்கு முன் இதேபோல், திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் ஒன்றிய நிர்வாகிகளை மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை அறிவித்தபோதும், கோஷ்டி பூசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் நடந்தது.
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment