Thursday, February 3, 2011

ராஜா குற்றவாளி ஆக மாட்டார்: எதிர்கட்சிக்கு விளக்கம் கொடுத்து தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

சென்னை: இன்று சென்னையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி செய்த பல்வறு நலத்திட்டங்களுக்கு நன்றியும் , பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மாஜி அமைச்சர் ராஜா விவகாரம் குறித்த தீர்மானத்தில் ராஜா கைது செய்யப்பட்டதால் அவர் குற்றவாளியாகி விட மாட்டார். என்றும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து தி.மு.க., அரசுக்கு களங்கம் கற்பிக்க நினைக்கும் எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.



"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா கைது; பா.ம.க., கூட்டணி பல்டி; டில்லியில் காங்., கூட்டணி பேச்சில் இழுபறி' என, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க., பொதுக்குழு இன்று கா‌லை 10 மணி அளவில் கூடியது. இதனால், பொதுக்குழுவில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் எனவும், ராஜாவின் கட்சிப் பதவி பறிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜாவுக்கு ஆதரவாகவும், எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் : மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது, புதிய சட்டசபை கட்டடம் அமைத்தது, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உருவாக்கியது, ராஜீவ் பெயரில் மருத்துவமனை, உள்ளிட்ட விஷயங்களுக்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநில சுயாட்சிக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிட மத்திய அரசை வலியுறுத்துதல், மீனவர் பிரச்னையான கச்சத்தீவு உரிமை விவகாரத்தில் புதிய ஒப்பந்தம் உருவாக்குதல், தமிழக மீனவர்கள் நலன் காத்திடல் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராஜா கைது விவகாரம் குறித்த தீர்மானம்: மாஜி அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பான விஷயத்தில் தி.மு.க., பொதுக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்சி தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும் என கருணாநிதி முன்பு கூறியிருந்தாலும், இந்த நிலையில் மாற்றம்இல்லை. ராஜா கைது செய்யப்பட்டதால் அவர் குற்றவாளியாகிவிட மாட்டார்.இதற்கான சான்றுகள் உள்ளன. எனவே இந்த விஷயத்தில் தி.மு.க., திறந்த புத்தமாக உள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி கழக அரசு மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்கட்சியினரை வன்மையாக பொதுக்குழு கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு தீர்மானத்தில் தணிக்கை குழு அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு ராஜாவை கைது செய்ய வேண்டும், அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் பார்லி.,யை முடக்கி ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறிய எதிர்கட்சியை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள் ஆகியோரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது. இந்த 3 பேரும் இன்று பாட்டியாலா கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்ப‌ட்டனர்.

No comments:

print