சேலம் : ""தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளதாக, கருத்து தெரிவித்த, முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை, வீண் போகாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக, மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர் தொகுதிகளில், பா.ம.க.,வின் கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். சேலத்தில் தங்கியிருந்த அவரிடம், நிருபர்கள் கேள்வி, எழுப்பினர்.
முதல்வர் கருணாநிதி, கூட்டணி குறித்து தெரிவித்த கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
முதல்வர் கருணாநிதி கூறியதை, நானும் பத்திரிகையில் படித்தேன். அதுசம்பந்தமாக, இப்போது எதுவும் தெரிவிக்க இயலாது. நிருபர்களை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனி அறையில் நிருபர்களை சந்திக்கவே விரும்புகிறேன். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளதா என்பது குறித்து, எவ்வித கருத்தும் இப்போது தெரிவிக்க இயலாது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுமா?
தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று, எதுவும் சொல்வதற்கில்லை.
பா.ம.க., மீது, முதல்வர் கருணாநிதி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உங்கள் பதில் என்ன?
முதல்வர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
ஊழல், லஞ்சப் பணத்தை வாங்குங்கள்: பா.ம.க.,வினருக்கு ராமதாஸ் அட்வைஸ் : இடைப்பாடி, தொகுதியில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. ராமதாஸ் பேசியதாவது: இடைப்பாடி தொகுதி என்பது, 30 கி.மீ., தூரத்துக்குள் தான் அடங்கி உள்ளது. தொகுதிக்குள் இருந்து கொண்டே, நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காலதாமதம் செய்யலாமா?இடைப்பாடி தொகுதி நமது கோட்டை. அருகில் உள்ள சங்ககிரி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகள், பா.ம.க.,வுக்கு, கிடைக்கும் என்கின்றனர். நமது கோட்டையான இடைப்பாடியில், அதை விட அதிக அளவில் ஓட்டுகள் பெற வேண்டும்.
இத்தொகுதியில், 2.10 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இத்தொகுதியில் விரைவில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு, 50 ஆயிரம் பேரை, நீங்கள் அழைத்து வரவேண்டும். அவ்வாறு அழைத்து வந்தால், நாம் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.இத்தொகுதி, பா.ம.க.,வின் கோட்டை என்பது, மற்ற கட்சிகளுக்கு தெரிந்து விடும். தேர்தல் நேரத்தில், ஓட்டுகளுக்கு, 100, 200 ரூபாய் மட்டுமின்றி, 1,000 ரூபாய் வரை கொடுப்பர். இந்த பணம் கொள்ளை, ஊழல், லஞ்சமாக பெற்றது தான். இந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு நீங்கள் பா.ம.க.,வுக்கு ஓட்டுப் போடுங்கள்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment