Tuesday, February 8, 2011

புறக்கணிக்கப்படுகிறது தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்: மம்தாவுக்கு மனசில்லை

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என பெருமை பெற்ற ராயபுரம் ரயில் நிலையம், மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. முனையமாக்க ஏராளமாய் இடமிருந்தும், மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா மனது வைக்காததால் வீணடிக்கப்படுகிறது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, சென்ட்ரல், எழும்பூருக்கு இணையான ரயில் முனையமாக தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமை பெற்றது சென்னை ராயபுரம் ரயில் நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் நவீன வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை, 1856 ஜூன் 28ம் தேதி அப்போதைய கவர்னர் லார்ட் ஹாரீஸ் திறந்து வைத்தார். சிம்சன் அண்டு கம்பெனி உருவாக்கிய ரயில், ஆங்கிலேயர்கள், சிறப்பு விருந்தினர்கள் 300 பேருடன் ராயபுரத்தில் இருந்து வாலாஜாபாத் ரயில் நிலையம் வரை சென்றது.இந்த ரயில் நிலையத்திற்கு வயது தற்போது 155. பழமையானது என்பதாலோ என்னவோ தெற்கு ரயில்வே இதை கொஞ்சமும் கனிக்காமல் கிடப்பில் போட்டு விட்டது. முதல் ரயில் நிலையம் முற்றுப்பெறும் நிலை ஏற்படுவது குறித்து, பொதுமக்கள் கவலையடைந்தனர்.இது குறித்து "தினமலர்' சுட்டிக்காட்டிய பின் விழித்துக் கொண்ட ரயில்வே நிர்வாகம், பாழடைந்த கட்டடத்தை சீரமைத்து, பாரம்பரிய சின்னம் என அறிவித்து விழா எடுத்தது.அதோடு தன் கடமை முடிந்ததாக நினைத்து, ராயபுரத்தின் பக்கம் கவனம் செலுத்தாமலேயே விட்டுவிட்டது. பாரம்பரிய கட்டடம் மட்டும் தான் இருக்கிறது. 76 ஏக்கர் நிலம், 17 ரயில் பாதைகள், இன்னும் தேவையான பாதைகள் அமைக்க வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும், இந்த ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை, மத்திய அரசு இன்னும் கண்டு கொள்ளாமலேயே உள்ளது.

அதிவேக வளர்ச்சி: கடந்த 1873ம் ஆண்டு ஆறு மீட்டர் கேஜ் வழித்தடங்களுடன் துவக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தற்போது 15 அகல வழித்தடங்களுடன் இயங்கி வருகிறது. நாடு முழுவதுமிருந்து ரயில்கள் வந்து சங்கமிக்கும் இடமாக மாறியுள்ளது.அதுபோல, 1906ம் ஆண்டு மூன்று மீட்டர் கேஜ் வழித்தடங்களுடன் எழும்பூர் ரயில் நிலையம், தற்போது ஒன்பது அகல வழித்தடங்களுடன், அபரிதமான வளர்ச்சி பெற்றுள்ளது.ஆனால், 1856ல் துவக்கப்பட்ட, ராயபுரம் ரயில் நிலையம் எந்த வளர்ச்சியும் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை இதற்கு மேல் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதால், அடுத்ததாக ராயபுரம் ரயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூருக்கு இணையான ரயில் நிலையமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்? ராயபுரம் ரயில்வே பணியாளர் குடியிருப்பு சிதிலமடைந்த நிலையில் கிடக்கிறது. ரயில்வேக்கு சொந்தமான "ராலீஸ் இந்தியா' குத்தகை காலம் முடிந்து, அந்த இடம் இடிக்கப்பட்டு, காலியாக உள்ளது. இப்ராஹிம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே அச்சகம், பெரம்பூருக்கு மாற்றப்பட்டதால், 12 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருந்து வருகிறது.அதன் அருகே, திருமலை கெமிக்கல்ஸ் ரயில்வேயிடமிருந்து குத்தகைக்கு எடுத்த பகுதியும் காலாவதியாகி விட்டது. இப்பகுதிகளை ஒருங்கிணைத்தால் 76 ஏக்கர் இடம் கிடைக்கும். 100 ஆண்டுகளை கடந்துள்ள ராயபுரம் பழைய மேம்பாலம் வலுவிழந்து விட்டது. இப்பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வரும் சுரங்கப் பாதையாக மாற்றினால், மேலும் 20க்கும் மேற்பட்ட டிராக்குகள் அமைக்க முடியும்.இவ்வளவு வாய்ப்புகள் இருப்பது குறித்தும், எந்த வகையில் முனையமாக்கலாம் என்பது குறித்தும் தமிழக ரயில் பயணிப்போர் சங்கமும், வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பு விரிவான திட்ட வரைவுகள் தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.மத்திய அமைச்சர் மம்தாவிடமும் வழங்கப்பட்டுள்ளது. ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, திண்டுக்கல் எம்.பி., சித்தன் பார்லிமென்டிலும் வலியுறுத்தி பேசினார்.இதுவரை ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மேம்படுத்துவது குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தேவைக்கும் அதிகமாக தாராளமான இட வசதி, போதிய வாய்ப்புகள் இருந்தும், ரயில்வே அமைச்சர் மம்தா இன்னும் மனது வைக்காததால், ராயபுரம் ரயில் நிலையம் சரக்குகளை ஏற்றி இறக்கும் இடமாகவும், புதர்கள் மண்டும் இடமாகவும் வீணடிக்கப்பட்டு வருவது, மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணைப்பு மையமாகும்: சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட வேண்டிய ஏழு துரித ரயில்கள் போதிய இடவசதி குறைவு காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. பல ரயில்கள் ராயபுரம் வழியாக இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதால், ராயபுரத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடியும்.மேலும், அரக்கோணம், தாம்பரம், கும்மிடிப்பூண்டியை இணைக்கும் மையமாக ராயபுரம் நிலையமாக மாறும். பேசின்பாலத்தில் தற்போது ஏற்படும் தேவையற்ற நெரிசல், ரயில்கள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.சென்ட்ரல், எழும்பூருக்கு இணையாக, ஏன், அதை விட அதிகமாக எக்ஸ்பிரஸ் ரயில்களையும் இயக்க முடியும் என்பதால், வடசென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக்க வேண்டுமென கோரிக்கை வந்துள்ளது. ஏற்கனவே மக்கள் கோரிக்கை ஏற்று, ராயபுரம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு, பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக சிறப்பான விழாவும் எடுத்துள்ளோம். தாம்பரம் ரயில் நிலையம் தற்போது மூன்றாவது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.பழமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பழமையான, தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையத்தை, வீணாக்காமல் எல்லா வகையிலும் பயன்படும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் உதவியாக அமையும்.

இடமில்லையா; மனமில்லையா?தண்டையார்பேட்டையை சேர்ந்த தூயமூர்த்தி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ரயில்வே முதுநிலை மேலாளர், "ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக விரிவாக்க போதிய இடம் இல்லை' தெரிவித்துள்ளார்.ராயபுரத்தில் உள்ள 76 ஏக்கர் இடம் முனையமாக்க போதாதா; ஏன் அதிகாரிகள் இப்படி குழப்புகின்றனர். அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்த மனமில்லையோ என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

ரூ.10 கோடி தர மக்கள் தயார் : ரயில் பயணிப்போர் சங்க நிர்வாகி டாக்டர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:சீரிய திட்டத்திற்கு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பது தமிழக முதல்வரின் கூற்று. அதன்படி, ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கும் சீரிய திட்டத்தை செயல்படுத்த, 10 லட்சம் ரயில் பயணிகள் தலா 100 ரூபாய் என 10 கோடி ரூபாய் பங்களிப்பை தர முன் வந்துள்ளோம்.திட்டத்திற்கு இந்த தொகை சிறியதாயினும், சீரிய திட்டங்களுக்கு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்ற முதல்வரின் கூற்றை, இந்திய நாட்டிற்கே எடுத்துரைத்து, தமிழக ரயில் பயணிகள் ஓர் வழிகாட்டுதலாக இருப்போம்.இவ்வாறு ஜெயச்சந்திரன் கூறினார்.

சிறப்பு கவனம் செலுத்துவாரா முதல்வர்?மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூரிலிருந்து துவங்கும் என அறிவித்துவிட்டு, பின் வண்ணாரப்பேட்டை என திருத்தம் செய்யப்பட்டது. வடசென்னை மேம்பட திருவொற்றியூரிலிருந்து மெட்ரோ ரயில் இயக்க வேண்டும் என மக்கள், கொட்டும் மழையில் மனிதச்சங்கிலி, நடை பயணம், அமைதி வழி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதல்வர், திருவொற்றியூர் விம்கோ நகர்வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டித்து உத்தரவிட்டார். அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.அதுபோல், பாரம்பரியமிக்க தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான, ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக்குவதால், வடசென்னை மட்டுமின்றி, தமிழக வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பதால் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். முதல்வர் தலையிட்டால், மத்திய அரசும் கூடுதல் கவனம் செலுத்தும்.

No comments:

print