Tuesday, February 8, 2011

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை: கருணாநிதி பேச்சு

சென்னை : ""இன்றைக்கு தமிழகத்தில், அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை, எந்த கடையில் விற்கிறது என கேட்கிற அளவிற்கு, நாகரிகம் நசிந்து போய் விட்டது,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.



கம்யூனிஸ்ட் இயக்கத்தின், மறைந்த மூத்த தலைவர் ஜீவாவின் பேத்தி பத்மா உஷாவின் திருமண விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:காலையில் எழுந்த போதே என் உடல் நலம் சரியில்லை. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று இவ்விழாவில் பங்கேற்றுள்ளேன். அண்ணன் ஜீவாவிற்கும் எனக்கும் உள்ள உறவு, தொடர்பு, நட்பு, நாகரிகப் பண்பாட்டோடு கூடிய வாக்குவாதங்கள் என்றைக்கும் அழிக்க முடியாதவை. ஜீவா ஒரு காலத்தில் தமிழகத்திலே உயிர் நாதமாக விளங்கினார். ஒரு பெரிய தலைவர், "தன்னால் உருவாக்கப்பட்ட பல தளபதிகள், தன்னுடைய குடும்பத்தை தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தான் மறைந்து போகிறார்.

ஆனால், அப்படி தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமையை, அந்த குடும்பத்திற்கு செய்ய வேண்டிய உதவியை மறந்து விட்டவர்கள் இன்னும் நாட்டிலே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் மறப்போம், மன்னிப்போம்' .அந்த காலத்தில் இழைந்த அந்த அன்பும், உறவும், நட்பும், இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளிடையே மலர்ந்தால், மணம் வீசினால், அந்த நாகரிகத்தை எல்லோரும் பெற்றால், கட்சித் தகராறு வேறு, கொள்கை பூசல்கள் வேறு, லட்சிய வேறுபாடுகள் வேறு, நட்பு வேறு என்ற அந்த அரசியல் நாகரிகத்தை, உலகத்திலே தமிழகத்தைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள்.இன்று அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை, எந்த கடையில் விற்கிறது என கேட்கிற அளவிற்கு, விசாரிக்கிற அளவிற்கு நாகரிகம் நசிந்து போய் விட்டது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

No comments:

print