Tuesday, February 8, 2011

கோர்ட் உத்தரவுப்படி யாகம்; கள் இயக்கம் மீண்டும் முடிவு

ஈரோடு: "" சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோவையில் இம்மாத இறுதியில், அஸ்வமேத யாகம் நடத்தப்படும்'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

அவர் கூறியதாவது: அண்டை மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. முழுமையான மது விலக்கு இல்லாத தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்க பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தை அஸ்வமேத யாஹம் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் இயக்கம் முடிவெடுத்தது. கோவையில் நவம்பர் 4ம் தேதி யாஹம் நடத்த கொண்டு வரப்பட்ட குதிரை பறிமுதல் செய்யப்பட்டது. போராட்டம் நடத்த வந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து சென்னை உள்பட பல மாவட்டங்களில் அஸ்வமேத யாஹத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் கேட்டோம்; கிடைக்கவில்லை. கள் இயக்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோரிக்கையிலுள்ள நியாயத்தை உணர்ந்த சென்னை உயர்நீதிமன்றம், "அஸ்வமேத யாஹம் நடத்த போலீஸார் அனுமதி வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இம்மாத இறுதிக்குள் முதல்கட்டமாக கோவையில், அஸ்வமேத யாஹம் நடத்தப்படும். அரசும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும், குதிரையை தடுத்து நிறுத்தலாம். அப்படி தடுப்பவர்கள், இயக்கம் நடத்தும், வாதவிவாதத்தில் பங்கேற்க வேண்டும். கள்ளுக்கு அனுமதி வழங்குவது தவறு என நிரூபித்துவிட்டால், கள் இயக்கம் கோரிக்கையை கைவிடும்; போராட்டத்தை விலக்கிக் கொள்ளும். இந்த சவாலை ஏற்று ஜனநாயக மரபுகளை காக்க அரசுகளும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

print