Monday, February 7, 2011

வைகோவையும் என்னையும் கொல்ல சதி : பாண்டியன் திடுக் தகவல்

நாகப்பட்டினம் : வைகோவையும், என்னையும் தீர்த்துக் கட்டிடலாம் என, சிலர் திட்டம் தீட்டுகின்றனர் என தா.பாண்டியன் குற்றம் சாட்டினார். தமிழக மீனவர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகை அவுரித் திடலில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து, இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது 1980ம் ஆண்டுகளில் இருந்து தொடர்கிறது. மீனவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.மேற்கு வங்கம், ஒடிசா, பீகாரில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டும் போது அவர்களை எந்த நாடும் சுட்டுக் கொன்றதில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


1980ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, தமிழக மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மீனுக்கு இருக்கும் மரியாதை கூட தமிழக மீனவனுக்கு இல்லை. நன்கொடையாக வழங்கிய கச்சத்தீவு நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனைப்படி தமிழக மீனவர்கள் தங்கி ஓய்வெடுக்க, வலைகளை உலர்த்த என அனைத்துத் தகுதிகளும் உள்ளது.

மதுரையில் தா.கிருஷ்ணனை கொன்றதைப் போல் வைகோவையும், எங்களையும் முடித்திடலாம் என சிலருக்கு ஆசை உள்ளது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இடைக்கால பட்ஜெட்டில் புதிதாக எந்த அறிவிப்பும் இல்லை. ஆட்சி முடியப் போகிறது என்பது அவர்களுக்கு தெரிந்து விட்டது. 91 ஆயிரம் கோடி ரூபாய் பொதுக் கடன் என குறிப்பிட்டுள்ளனர். இதற்குச் சேவை கட்டணமாக 14 ஆயிரம் கோடி ரூபாய் கட்ட வேண்டும். 430 கோடி ரூபாய் மிச்சமிருப்பதாக கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

No comments:

print