Sunday, February 6, 2011

ரங்கசாமியுடன் கூட்டு:வன்னியர் ஓட்டுக்கு "ரூட்டு'அ.தி.மு.க., திட்டம்


ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி உடைவது தொடர்கதையாக மாறி வருகிறது. 2006ம் ஆண்டு தேர்தலின் போது, முன்னாள் சபாநாயகர் கண்ணன் தலைமையில், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் உதயமாகி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.தற்போது முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையில் உருவாகும் புதுக் கட்சியுடன் அ.தி.மு.க., கூட்டணி வைப்பதால், புதுவையிலும், தமிழகத்திலுள்ள வட மாவட்டங்களிலும் உள்ள, வன்னியர்களின் ஓட்டுகளை அ.தி.மு.க., இழுக்கத் திட்டமிட்டுள்ளது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் 21 லோக்சபா தொகுதிகள், 120 சட்டசபை தொகுதிகளின் வெற்றி தோல்வியை வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் ஓட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 1989ம் ஆண்டு பா.ம.க., உதயமான பின், தி.மு.க., அ.தி.மு.க., - காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எந்த அணியில் பா.ம.க., இடம் பெறுகிறதோ அந்த அணி வெற்றி அடையும் என்ற நிலை உருவானது.தற்போது பா.ம.க., எந்த அணியில் இடம் பெற போகிறது என்ற முடிவு தெரியாமல் திரிசங்கு சொர்க்க நிலையில் உள்ளது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமியை ஆயுதமாக பயன்படுத்த அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ரங்கசாமியை அ.தி.மு.க., நிர்வாகிகள் தம்பிதுரை, செம்மலை ஆகியோர் சந்தித்து புதுவை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தி திரும்பியுள்ளனர்.வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ரங்கசாமியை முதல்வர் பதவியிலிருந்து விலக்கியதால் காங்கிரஸ் மீது வன்னிய சமுதாய மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில், புதுவை மாநிலத்தில் ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிக்க முன் வந்திருப்பதால், அ.தி.மு.க., மீது வன்னியர் சமுதாய மக்களின் ஆதரவு பெருகும் என்று அ.தி.மு.க., கணக்கிடுகிறது.
வன்னியர்களின் ஆதரவு புதுவைக்கு மட்டுமல்லாமல், தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்றும், பா.ம.க.,விற்கு விழும் வன்னியர் ஓட்டுகளும் ரங்கசாமி மீதுள்ள அனுதாப அலையினால் அ.தி.மு.க.,வுக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், வன்னியர்கள் ஓட்டுகளை சிதறவிடக் கூடாது என்பதற்காக, காங்கிரசில் உள்ள வன்னியர் தலைவர்கள் புது திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளனர். ரங்கசாமிக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளை, காங்கிரசில் இணைத்து அவரை தீவிர அரசியல் ஈடுபடுத்துவதற்குரிய முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளது.
அதே போல் தமிழகத்தில் முன்னாள் எம்.பி., அன்பரசு தலைமையில் காங்கிரசில் உள்ள, வன்னியர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் நாளை அடையாறில் உள்ள, வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் சுகந்தன் அலுவலகத்தில் அவசரமாகக் கூடுகிறது.இக்கூட்டத்தில் காங்கிரசில் வன்னியர்களுக்கு அதிகமாக சீட் கொடுக்க வேண்டும். ரங்கசாமி கட்சி மற்றும் அ.தி.மு.க., வுக்கு சாதகமான ஓட்டுகளை தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு திருப்புவதற்குரிய வியூகங்களும் அக்கூட்டத்தில் வகுக்கப்படுகிறது.
இது குறித்துகூறியதாவது:ரங்கசாமி எளிமையாக பழகக் கூடியவர். இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். அவரை காங்கிரசிலிருந்து உதாசீனப்படுத்தியதால், அவருக்கு அனுதாப அலை உருவாகியுள்ளது. அவர் துவங்குகிற புதுக் கட்சியுடன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கும் போது, அ.தி.மு.க., வுக்கு பலத்தை கொடுக்கும்.
புதுவையில் மட்டுமல்லாது, தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களின் ஓட்டுகளும், குறிப்பாக பா.ம.க., ஓட்டுகள் அ.தி.மு.க., பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது. தமிழக காங்கிரசில் உள்ள வன்னியர் சமுதாய தலைவர்களும் ஒரே குடையின் கீழ் அணி திரள திட்டமிட்டுள்ளனர்.வன்னியர்களுக்கு உள்ள பாதக, சாதக விஷயங்களை அகமது படேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் அன்பரசு விலா வாரியாக கூறியுள்ளார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் வன்னியர்களுக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் தரப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு காங்கிரஸ் பிரமுகர் கூறினார்

No comments:

print