கூட்டணி விவகாரத்தில் தெளிவான முடிவு சொல்லாமல், காலம் கடத்தி வரும் தே.மு.தி.க.,வால், "தேர்தல் களத்தில் யாருடன் கூட்டணி அமைத்து கொள்வது' என, திசை தெரியாமல் அலைந்த பா.ம.க.,விற்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு பெரும் கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்து கொள்வதும், தாங்கள் இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் கூட்டணி என மார் தட்டுவதுமே பா.ம.க., கொள்கையாக வைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வட மாவட்ட பகுதியில் அதிகளவில் வன்னியர்கள் வசிப்பதால், அப்பகுதியில் பா.ம.க., எப்போதும் பலமாக காணப்படும். இதனால் கடந்த சட்டசபை தேர்தல்களிலும், லோக்சபா தேர்தல்களிலும் மாறி, மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தேவையான பதவி சுகங்களை அனுபவித்தனர். பல கட்டங்களில், கடைசி நேரத்தில் கூட்டணி கட்சியை கழற்றி விட்டு, கட்சி மாறி செல்வதே வழக்கமாய் வைத்திருந்த அக்கட்சிக்கு, புது சோதனையாக, கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் அமைந்தன; போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பா.ம.க., தோல்வியை தழுவியது. பலமிழந்த கூட்டாளியை கூட்டணியில் இருந்த அ.தி.மு.க.,வும் வெறுக்க, தி.மு.க.,வும் ஒதுக்கி தள்ளவே, தமிழக அரசியலில் தண்ணீர் இல்லாத காட்டில் பா.ம.க., தத்தளித்தது. இதனால், பா.ம.க.,வினர் தமிழக அரசியலில் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியானது குறித்து கவலையில் இருந்தனர்.
தேர்தலில் வெற்றி பெறும் சூத்திரத்தில் கில்லாடியாக செயல்பட்டு வந்த தி.மு.க.,விற்கு இடியாய் வந்த பிரச்னை ஸ்பெக்ட்ரம். இதை அ.தி.மு.க., கையில் எடுக்க, தே.மு.தி.க.,வும் தி.மு.க.,வை சாட, இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சேலத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்யானது. தொடர்ந்து தனது கட்சி அலுவலகத்தில் அடுத்தடுத்த நடந்த இரண்டு கட்சி கூட்டத்திலும், கூட்டணி குறித்து பேசாததால் இரு கட்சி தொண்டர்களும், முடிவு தெரியாமல் இருந்தனர். தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு அ.தி.மு.க.,வை யோசிக்க வைத்தது. கூட்டணி குறித்த விஷயத்தில் தே.மு.தி.க., தொடர்ந்து காலம் தாழ்த்தவே, அ.தி.மு.க.,வின் பார்வை பா.ம.க., பக்கம் சற்று திரும்பியது. இதனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட பா.ம.க., மீண்டும் இரண்டு கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பழைய ஆட்டத்தை கையில் எடுத்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது என்ற முதல்வரின் டில்லி பேட்டிக்கு உடனே மறுப்பு கொடுத்து பா.ம.க., தனது செல்வாக்கை அதிகரிக்க பார்த்தது. ஆனால், முதல்வரும், "பா.ம.க.,வை சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம்' என, பதிலடி கொடுக்க, தற்போது அ.தி.மு.க.,வின் கதவை தட்ட வேண்டிய நிலை பா.ம.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., அணியில் பா.ம.க.,விற்கு இடம் கிடைக்குமானால், அரசியலில் அடுத்த ரவுண்டு வருவதற்கான பிரகாசமான வாய்ப்பு பா.ம.க.,விற்கு கிடைப்பது உறுதி.
கடைசி நேர கெஞ்சல்: தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்பிய ராமதாஸ், உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து உதவி கோரியுள்ளார். ஆனால், பா.ம.க.,விற்காக தன்னால் பரிந்து பேச முடியாது என அவர் மறுத்துவிட்டதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, "முன்னாள் அமைச்சர் சண்முகம் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டும்' என்ற கோரிக்கைகளை பா.ம.க., முன் வைத்தது. ஆனால், அவர்களும் பா.ம.க.,வை கண்டுகொள்ளாத நிலையே தொடர்வதாக கூறப்படுகிறது
- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment